பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

வல்லிக்கண்ணன்


மாதம் ஒருமுறை வெளியீடென, அது வந்துகொண்டிருந்தது. அதன் எட்டாவது இதழிலிருந்து அசோகமித்திரன் சிறப்பாசிரியரானார்.

’முன்றில்’ ஒன்பதாவது இதழ் ஆண்டுமலர் ஆகப் பிரசுரமாயிற்று. 1989 நவம்பர்—டிசம்பர் இதழ் அது. 1990—ல் மூன்று இதழ்களைக் கொண்டு வந்தது ’முன்றில்’ சிறுகதை, கவிதை படைப்பிலக்கியத்துக்கு ‘முன்றில்’ நன்கு பணியாற்றியுள்ளது.

1987—ல் பிறந்து, நல்லமுறையில் வளர்ந்து, இப்பவும் வந்து கொண்டிருக்கிற இலக்கியச் சிற்றேடு ’கனவு’. சுப்ரபாரதி மணியன் செகந்திராபாத்திலிருந்து இக் காலாண்டிதழை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும், பாராட்டப்பட வேண்டிய விதத்தில் கனவு ஆண்டு மலர் வெளியிடப்படுகிறது. சிறுகதை மலர், மலையாளக் கவிதைகள் சிறப்பிதழ், கட்டுரைச் சிறப்பிதழ் என்றெல்லாம் கனவு இதழ்கள் மலர்ச்சி பெற்றுள்ளன. படைப்பிலக்கியத்துக்கு ‘கனவு’ நல்ல தொண்டாற்றிக் கொண்டிருக்கிறது.

சிரத்தையோடு தனது ஒவ்வொரு இதழையும் ஒரு சிறப்பிதழாக உருவாக்கி வருவது, கோணங்கி என்ற படைப்பாளியை ஆசிரியராகக் கொண்டுள்ள ‘கல்குதிரை’. கோணங்கி திறமை உள்ள படைப்பாளி. புதுமைகள் செய்வதில் ஆர்வம் உடையவர். அவரது கல்குதிரை தனித்தன்மை கொண்ட பத்திரிகையாக வந்து கொண்டிருக்கிறது.

சிறப்பிதழ்கள் தயாரிப்பதில் கோணங்கி ஒரு ஒழுங்குமுறையை அனுஷ்டிப்பதாகத் தெரியவில்லை. இந்தி எழுத்தாளர் அக்ஞேயா பற்றி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டார். அடுத்து, அரவிந்தரின் சாவித்திரி காவியம் பற்றியும், தமிழ்நாட்டுச் சித்தர்கள் இயல்பு பற்றியும் ஒரு சிறப்பிதழ். அப்புறம் டாஸ்டயேவ்ஸ்கி பற்றிய மாபெரும் சிறப்பிதழ். இந்தப் போக்கு எப்படி இருந்தாலும், கல்குதிரை’ ஒரு சிறப்பான சிற்றிதழாக வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்தான்.

விசேஷமான தனித்தன்மை கொண்ட இன்னொரு சிற்றிதழ், கோயமுத்தூரிலிருந்து வெளிவரும் ’நிகழ்’ ஆழ்ந்த சிந்தனை, தீர்க்கமான ஆய்வு, தெளிவான அபிப்பிராயங்கள், புத்தக, விமர்சனம், சமுதாய மேம்பாடு குறித்த தத்துவச் சிந்தனைகள் ’நிகழ்’ பத்திரிகையில் இடம் பெறுகின்றன. கோவை ஞானியின் ஆழ்ந்த சிந்தனைத் திறமும், பரந்த கல்வி அறிவும் நிகழ் உள்ளடக்கத்துக்குக் கனம் சேர்க்கின்ற்ன.

சென்னையிலிருந்து பிரசுரமாகும் ’விருட்சம்’ தரமான இலக்கிய ஏடு ஆக வளர்ந்து வருகிறது. 1988 பிற்பகுதியில் தோன்றிய இக்காலாண்டு ஏடு அழகியசிங்கர் என்ற படைப்பாளியை ஆசிரியராகக் கொண்டிருக்கிறது. கவிதை வளத்துக்குக் கணிசமான பங்கு செலுத்தி வருகிறது விருட்சம்.

புதுக் கவிதையில் புதுமைகள் பண்ணுவதில் ஆர்வம் காட்டிய ’கிரணம்’ காலாண்டிதழும் குறிப்பிடத்தகுந்த இலக்கியப் பத்திரிகை ஆகும்.

எழுபதுகளில் பேராசிரியர் நா. வானமாமலை ’ஆராய்ச்சி’ என்ற காலாண்டிதழை நடத்திவந்தார். பல்கலைக்கழக ஆய்வுகள் தன்மையில்