பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

வல்லிக்கண்ணன்


பலர் அதில் கலந்து கொண்டனர். அப்போது வெளியிடபபடட கருத்துகள், தீர்மானங்கள் அனைத்தையும் தொகுத்து, ‘இலக்கிய வெளிவட்டம்‘ ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சினைகளையும் போராட்ட அனுபவங்களையும் தமிழ் நாட்டினருக்கு உணர்த்தும் நோக்குடன் அது தயாரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறப்பிதழுக்குப் பிறகு, அச் சிற்றிதழ் தொடர்ந்து நெடுநாள் வாழமுடியாமல் ஆகிவிட்டது.

”‘படித்தல்‘ என்பது உண்மையைத் தேடுவது; அந்தத் தேடல் சுலபமற்றதும் முடிவற்றதும் ஆகும்” என்று அறிவித்தபடி, ‘மானுடம்‘ எனும் இருமாதம் ஒருமுறைச் சிற்றேடு, திருச்சியிலிருந்து 1979 முதல் வெளிவந்தது. தரமான படைப்புகள்— சமூக விழிப்புணர்வு, சமுதாய மாற்றத்திற்கான உந்துதல்கள்— இவற்றில் நம்பிக்கை கொண்டு செயற்படுபவர்களிடமிருந்து வந்தாலும், அத்தகைய நோக்கங்களை மறைமுகமாகக் கொண்டு கலை— இலக்கியம் மூலமாய் வாழ்வின் தீவிரத்தை உணர்த்துவோரிடமிருந்து வந்தாலும், அவைகளின் இலக்கியத் தரத்தையே பெரிதாக மதித்து வரவேற்று வெளியிட்டது, மானுடம், படைப்பிலக்கியத்துடன் இலக்கிய விமரிசனம், நவீனத் திரைப்படம், ஓவியம் பற்றிய கட்டுரைகள், அரசியல் விமரிசனங்கள் ஆகியவற்றையும் அது பிரசுரித்தது; வீதி நாடகங்கள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தது.

1981முதல் ‘மானுடம்‘, தன்னை, நவீன இலக்கியத்தின் குரல்‘ என அறிவித்துக்கொண்டது. படைப்பிலக்கியத்துடன், சமூகவியல், காலச்சாரம், மற்றும் சார்புடைய துறைகள் பற்றிய விமரிசனக் கட்டுரைகளை வெளியிடுவதில் உற்சாகம் காட்டியது. 1983 ஜனவரியில் வெளிவந்த மானுடம் 10ஆவது இதழ் விசேஷமான சிறப்பிதழ் ஆகும்.

1982 அக்டோபரில், திருச்சியில், ‘இலக்கிய— கலாச்சார இயக்கத்தின் திருச்சிக் குழு, ‘சினிமாவும் நமது கலாச்சாரமும்‘ பற்றி இருநாள் கருத்தரங்கு நடத்தியது. அங்குப் படிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து விசேஷ வெளியீடாகப் பிரகரித்தது, ‘மானுடம்‘.

கவனிப்புக்குரிய சிற்றிதழாக வளர்ந்துவந்த ‘மானுடம்‘, அதன்பிறகு பிரசுரம் பெறுவதற்கான வசதிகளைப் பெறாது நின்றுபோயிற்று.

1983-ஆம் வருடம், தரமான அநேக சிற்றிதழ்களின் இறுதி ஆண்டாக அமைந்திருந்தது என்று சொன்னால் அதில் தவறில்லை.

மதுரை இலக்கிய வட்டம் சார்பில் வந்து கொண்டிருந்த ‘விழிகள்‘, அந்த ஆண்டின் ‘பாடுவாசியான‘ மற்றொரு இதழ் ஆகும். கிண்டல் தொனியிலும், காரசாரமான செய்திகளை வெளியிட்டுவந்த இதழ் அது.