பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

339


‘ரிப்போர்ட்டு‘, ‘மியாவ்‘ என்னும் தலைப்புகளில் பல தகவல்களையும், விறுவிறுப்பான அபிப்பிராயங்களையும், சூடான எண்ணங்கயையும் ‘விழிகள்‘ தந்து கொண்டிருந்தது. சோதனை ரீதியிலான சிறுகதைகளையும் புதுக்கவிதைகளையும் அது வெளியிட்டது. கவி பாரதியார் நூற்றாண்டுச் சமயத்தில், 1983 ஜனவரி இதழைப் ‘பாரதி மலர்’ என்று பிரசுரித்தது. ‘விழிகள்‘, தெருக்கூத்து, பகல்வேஷம் ஆகிய மக்கள் கலைகளின் ஆய்வு தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது.

கவிஞர் ஆத்மாநாம் ஆசிரியராக இருந்து நடத்திய ‘ழ’ இதழும், 1983 ஜனவரியுடன் முடிந்துபோயிற்று. 1978 மே முதல் பிரசுரம்பெற்று வந்த ‘ழ‘, அதன் 24ஆம் இதழை, 1983 ஜனவரியில் வெளியிட்டது; அவ்வளவுதான்.

பின்னர் 1987-ல், ‘ழ’ மறுமலர்ச்சி பெற்றது. கவிஞர் ஞானக்கூத்தன், அதன் ஆசிரியரானார். அந்த வருடமும் 1988லும், ‘ழ'வின் சில இதழ்கள் வந்தன; நீடித்து வளர முடியவில்லை, அதனால்.

1981 மார்ச்சு மாதம், கவிஞர் ஞானக்கூத்தன், ‘கவனம்‘ என்று இதழைத் தொடங்கினார். 1982 மார்ச்சில், அதன் ஏழாவது இதழ் வந்தது; அதனுடன் ‘கவனம்‘ நின்றுவிட்டது.

‘கவனம்‘ வலியுறுத்திய ஒரு கருத்து முக்கியமானது:

“இலக்கியப் பத்திரிகைகளை வாசிப்பது மட்டுமின்றி, அவற்றில் பிரசுரமாகும் படைப்புகளைக் குழுவாக விவாதித்து விமரிசனம் செய்வது, அதன் ஆசிரியர்களை நேரடியாகச் சந்திக்கச் செய்து விவரங்களில் தெளிவு காணுவது போன்றவை மிகவும் பயனுள்ளவையாகத் தோன்றுகிறது. இது இன்றைய இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து செயல்படும்போது சரியாகவே தெரிய வருகிறது எனலாம். இலக்கியப் பத்திரிகைகளின் பணிகளுக்குத் தொடர்ச்சியான அடுத்த கட்ட முக்கியப் பணியாக இதைக் கருதவும் முடியும்போது, இலக்கிய அமைப்புகளின் முக்கியம் இன்னும் கூடிப்போகிறது.”

பூம்புகார்— மேலையூரில், 1980—ல் தோன்றிய ‘முழக்கம்‘, திருநெல்வேலி மாவட்டத்தில் 1978—ல் தொடங்கப்பெற்ற ‘தேடல்‘, பண்ணை மூன்றடைப்பு எனும் இடத்திலிருந்து 1978முதல் வந்துகொண்டிருந்த ‘யாத்ரா‘ ஆகியனவும், 1983-ல், தங்கள் முடிவை அடைந்துள்ளன.

‘யாத்ரா‘, தனது 27ஆவது இதழில் சிறுபத்திரிகையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்த ஒரு கருத்து முக்கியமானது; இன்றைக்கும் பொருந்திவரக்கூடியது.