பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6. கிராம ஊழியன்



மூன்றரை வருட காலம், திருச்சிராப்பள்ளி மட்டக்காரத் தெருவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'கலாமோகினி' மாதமிருமுறை இலக்கியப் பத்திரிகை சென்னை நகரில் குடியேறத் திட்டமிட்டது. திருச்சியிலிருந்து செயல்புரியக்கூடிய சூழ்நிலை காலப்போக்கில் மிகுந்த சிரம சாத்தியமாகியிருந்ததால், தலைநகருக்குப் போய் இலக்கிய முன்னணியின் வளர்ச்சிக்கு வழிகாண இயலும் என்று அதன் ஆசிரியர் கருதினார்.

‘சம்பிரதாயம் என்ற சுவடுபட்ட பாதையில் இலக்கியம் சென்று கொண்டிருப்பது தமிழ் ரசிகர்கள் அறிந்ததொரு விஷயம்தான். இந்தச் சுவட்டிலிருந்து விலகிப் புதுப் பொருள்கள், புதிய பல கோணங்கள் ஆகிய பல புதுப் பிரதேசங்களுக்கு இலக்கிய முன்னணி செல்வதால் நமது வாழ்க்கை, கலை, சமூகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தேக்கம் சற்றே சலனமுறும் என்று நம்புகிறோம் என்று அவர் அறிவித்தார்.

‘கலாமோகினியின் பட்டணப் பிரவேசமோ புதிய முயற்சிகளோ அதன் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் துணைபுரியவில்லை. பத்திரிகை காலம் தவறாது வர இயலவில்லை. பொருளாதார பலத்தை உத்தேசித்து ‘லிமிடெட் கம்பெனி' சோதனை கூடச் செய்து பார்த்தார் ஆசிரியர். அதுவும் வெற்றி பெறவில்லை.

1946 ஏப்ரல் மாதம் 18-ம் தேதி சென்னையிலிருந்து கலா மோகினியின் புதிய வடிவ இதழ் வந்தது. அதே வருஷம் செப்டம்பர் 20-ல் வந்ததே அதன் கடைசி இதழ் ஆக அமைந்தது.

‘கலாமோகினி' அதன் நான்கு வருட வாழ்வில், இலக்கிய வரலாற்றில் புதிய அத்தியாயம் எதையும் சேர்த்து விடவில்லை என்றே குறிப்பிட வேண்டும். ‘மணிக்கொடி'க்குப் பிறகு நிலவிய வெறுமையைப் போக்கி, காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு கருவியாக அது அமைந்திருந்தது. 'மணிக்கொடி' எழுத்தாளர்களில் சிலரும், மணிக்கொடி காட்டிய பாதையில் முன்னேற முனைந்த இளைய எழுத்தாளர்கள் பலரும் தங்கள் ஆற்றலைக் காட்டுவதற்கு ஏற்ற களமாக அது விளங்கியது. அநேகப் பிரச்னைகளில் துணிச்சலோடு ஆணித்தரமாக