பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

வல்லிக்கண்ணன்


“சிறுபத்திரிகை என்பது இன்று தனக்கானதொரு தத்துவத்தையும் இலக்கணத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான சாதாரன வாசகப் பெருமக்களினின்றும் வேறுபட்டிருப்பதுமட்டுமேயன்றிப் பல இடர்ப்பாடுகளுக்கிடையிலும் தங்களுக்கான மதிப்புகளை (values)த் தேடுவதிலும் தமிழர்களில் ஒரு சிலரேனும் மாறுபட்டிருக்கிறார்கள் என்பதைச் சிறுபத்திரிகைகள் ஓர் இயக்கமாக இயங்குவதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இது தமிழுக்கு மட்டுமே உரிய நிகழ்வு” என்று கணித்த ‘படிகள்‘, சிறுபத்திரிகைகள் பற்றிய தனது ‘திடமான கொள்கை களையும்'யும் அறிவித்தது. அது பின்வருமாறு:

“சிறுபத்திரிகைகளை, முதலில், இரண்டாகப் பிரிக்க வேண்டும். வெறும் இலக்கியம் பற்றிப் பேசும் கொல்லிப் பாவை, யாத்ரா, சுவடு, வைகை, சாதனா போன்றவை ஒருபுறம் விழிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம், பிரக்ஞை போன்ற, கட்சிக்குட்படாத, இடதுசாரிப் பண்புடன் வரும் சிறுபத்திரிகைகள் மற்றொரு புறம். ( கட்சிப் பார்வை கொண்ட பத்திரிகைகளை இங்கே விட்டுவிடுகிறோம்; வேறுசில பத்திரிகைகளின் நிலைப்பாடு தெளிவாகவில்லை என்பதால், அவையும் இங்கே சேர்க்கப்படவில்லை.)

இவ்விரு வகைச் சிறுபத்திரிகைகளையும் முக்கியமானவைகளாகக் காண்கிறோம்.

வெறும் இலக்கியச் சிறுபத்திரிகைகள், மிகுந்த ஜனரஞ்சகத்திற்கு எப்படியும் எதிர்ப்பானவைதாம். கசடதபற, எழுத்து, நடை போன்ற இலக்கியப் பத்திரிகைகளின் சாதனை மறக்கக்கூடியதல்ல. குங்குமம், குமுதம், ராணி வகைகளால் நாநயமான தமிழின் மரபைச் சாகக்கொடுத்துள்ளோம்; அதுபோல் நகரக் கலாச்சாரங்களும் அழிகின்றன. இலக்கியப் பத்திரிகைகள் என்று கூறிக்கொள்பவை கலாச்சாரத்தின் ஓர் அங்கமான இலக்கியத்தைமட்டும் கவனிக்கின்றன; அல்லது சினிமா, நாடகம்மட்டும் கவனிக்கப்படுகிறது. இப்பத்திரிகைகள் தங்களை உயர்த்திக் கலாச்சார இதழ்களாய் மாற்றிக்கொள்ளாதபடி, அவற்றின் குறுகிய இலக்கிய அறிவும், பரந்த பார்வையின்மையும் செல்கின்றன. என்றாலும், தங்களின் அஞ்ஞானத்தையும் மீறி, இந்த இலக்கியப் பத்திரிகைகள், வியாபார இலக்கியத்தையும் அவற்றின் நடைமுறைகளையும் எதிர்ப்பதால், அவற்றிலும் ஓரளவு இடதுசாரித் தன்மை உண்டு என்று நம்புகிறோம்.

விழிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகளை நாங்கள் மிகுந்த மதிப்புடன் அரவணைக்கிறோம். இவைகள், எங்களை ஒத்த சமூக, இலக்கிய, கலாச்சாரப் பார்வை கொண்டிருக்கின்றன.