பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

343


மேலும், அவை அரசியலிலும் தங்களுக்கான நிலைப்பாட்டைத் தேர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், தமிழகச் சூழலில் இன்று செயற்படும் வெறும் இலக்கியப் பத்திரிகைகூடத் தன் இலட்சியத்தை உண்மையில் நிறைவேற்ற, வெறும் இலக்கிய சிரத்தை மட்டும் காட்டினால் போதாது என்பதை ஒரு சித்தாந்தமாகவே முன்வைக்கத் தயாராக உள்ளோம்.

தற்சமயம், கலாச்சார இயக்கம் எதுவும் அரசியலைப் புறக்கணிக்க முடியாது என்று நினைக்கிறோம் அதற்காக நேரடி அரசியலில் ஈடுபடச் சொல்லவில்லை. உங்களுக்கென்று அரசியலிலும் ஒரு பார்வை வேண்டும் என்கிறோம். சிறுபத்திரிகைகளுக்குப் பொருந்தும் இப்பார்வை, எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

மொத்தத்தில், இருவகைப் பத்திரிகைகளுக்கும் உள்ள பொதுப் பண்பு இப்போது முக்கியமாய்க் கவனிக்கப்படவேண்டும். வியாபார கலாச்சாரம் என்ற அரக்கிதான் நம் எல்லோரின் முதல் குறி, காரணம், தமிழில் பத்திரிகை வியாபாரம், அமெரிக்கா மாதிரிப் பூதாகாரமாய்ப் பெருக ஆரம்பித்துள்ளது. சிறுபத்திரிகைகளின் முதல் எதிரி ஜனரஞ்சகப் பத்திரிகைகள்தான் என்பதைக் காணவேண்டும். அதன்பின், ஜனரஞ்சகம் என்பது பற்றிய ஆழமான ஆய்வில், பண்டிதரும் பட்டதாரிக் கும்பலும் கண்ணில் தென்படுவர். அதுபோது, சிறுபத்திரிகைகளுக்குள் உள்தாக்குதல் குறையும் கட்சிக் கட்டுப்பாட்டுடன் வெளிவரும் பத்திரிகைகளின் வறட்டுத்தனமும் வெளிப்படாதிருக்காது. மும்முரமான தாக்குதல் பெரும் பத்திரிகை, பல்கலைக் கழகங்கள் என்று திரும்பும், சிற்றிலக்கியப் பத்திரிகைகளின் லட்சியமான இலக்கியப் பார்வையும் ஆழங்கொள்ளும்.”

1979ல் ‘படிகள்‘ வெளியிட்ட இந்தக் கண்ணோட்டத்தின் முக்கியத்துவம் கருதியே, இவ்விரிவான மேற்கோளை இங்குக் காட்ட நேர்ந்தது. இது இன்றைக்கும் வெகுவாகப் பொருந்திவரும் கருத்தாகவே உள்ளது. சிறுபத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் சிந்திக்கவைக்கும் கருத்தும் இதுவாகும். -

‘படிகள்‘ இதழும் நீண்ட காலம் தனது வளர்ச்சியைத் தொடர இயலவில்லை.

1980களின் மத்தியில் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் காட்டிய முக்கியமான பத்திரிகைகள்— ‘கொல்லிப் பாவை‘, ‘ஞானரதம்‘ ஆகியவையாம்.

‘கொல்லிப் பாவை‘ அ. ராஜமார்த்தாண்டன் பொறுப்பில், மிகுந்த ‘இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையே‘, சில வருடங்கள் வளர்ந்தது. பன்னிரண்டு இதழ்களுக்குப் பிறகு, அவர், அந்தக்