பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

வல்லிக்கண்ணன்


வெளியிடும் முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

1980களிலும் அந்தவிதமான புதிய முயற்சிகளுக்குக் குறைவில்லை. லயம், இனி, புதுயுகம் பிறக்கிறது, மண், பயணம், பாலம், எதிர்வு அஸ்வமேதா, நிஜம் என்று அநேகமானவை. இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை காட்டுவதில் ஆர்வங்கொண்டு உழைத்ததைப் பாராட்ட வேண்டும்.

இவை பலவும் ஒருசில இதழ்களே பிரசுரம் பெறக்கூடிய வாய்ப்பினையே பெற்றிருந்தன. நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் விதைத்தபடி வெளிவந்த இச்சிற்றிதழ்கள் தங்களால் இயன்ற அளவு ஒளிவீச முயன்றுள்ளன என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விஷயமேயாகும்.

இப்படிப்பட்ட ஒரு சூழலிலும் காலநிலையிலும்தான், சுந்தர ராமசாமி, ‘காலச்சுவடு‘ காலாண்டிதழை ஆரம்பித்தார். 1988 ஜனவரியில், ‘கனவுகளும் காரியங்களும்‘ நிறைந்த உள்ளத்தோடு, தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு, படைப்பு சமூக விமரிசனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இயன்றவரை தரமாகத் தர முயலும், என்ற அறிவிப்புடன் ‘காலச்சுவடு‘ தோன்றியது.

‘காலச் சுவடு‘ இதழ் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பிதழே என்று கருதப்பட வேண்டிய விதத்தில் அமைந்திருந்தது. தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் அது தனித்தன்மை காட்டியது. 1989 இறுதியில், அதன் எட்டாவது இதழ் பிரசுரமாயிற்று, அதன்பிறகு, ‘காலச் சுவடு‘ வரவில்லை.

1/4. கிரணம் என்ற காலாண்டிதழ்களும் புதுமை செய்ய முயன்றன. ‘கிரணம்‘, கவிதையில் தீவிரச் சோதனைகள் செய்தது. ‘1/4‘ என்ற பத்திரிகை, நான்கு இதழ்களைத்தான் பிரசுரிக்க முடிந்தது. கிரணமும் அதிக காலம் சாதனைகள் புரியக்கூடிய வாய்ப்பைப் பெறவில்லை.

கவனிப்புக்குரிய மற்றொரு பத்திரிகை, ‘முன்றில்‘. க. நா. சுப்ரமண்யத்தைச் சிறப்பாசிரியராகக் கொண்டு, 1988 செப்டம்பரில், மாதப் பத்திரிக்கையாக ‘முன்றில்‘ பிறந்தது. க. நா. சு. எழுத்துகளை அது அதிகம் பிரசுரித்துவந்தது. 1988 டிசம்பர் மாதம், ‘க. நா. சு. நினைவு மலர்’ வெளியிட நேரிட்டது. முன்றில் கால—ஒழுங்கைக் கடைப்பிடிக்க முடியாது நிலையும் வந்தது. இருப்பினும், ஒவ்வொர் இதழும் தரமான தயாரிப்பாக, இருமாதம் ஒரு முறை வெளியீடு என வந்து கொண்டிருந்தது. அதன் எட்டாவது இதழிலிருந்து அசோகமித்திரன் சிறப்பாசிரியரானார். ஒன்பதா-