பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

வல்லிக்கண்ணன்


இக்காலாண்டிதழ் நல்ல வளர்ச்சி காட்டியது. கவிதை வளத்துக்குக் கணிசமான பங்கு செலுத்தியது. 1990களில் அது ‘நவீன விருட்சம்‘ என்று பெயர்மாற்றம் கொண்டு, பல புதுமைகள் செய்வதில் முனைப்புக் காட்டியுள்ளது.

‘விருட்சம்‘ தோன்றுவதற்கு முன்னர், ‘ழ’ பத்திரிகையுடன் தொடர்பு கொண்டிருந்த சில நண்பர்கள், ‘மையம்‘ என்ற புதுமை இதழைத் திருவல்லிக்கேணியிலிருந்து வெளியிட்டார்கள். இலக்கியத்துடன், நவீனக் கலைகளுக்கும் நவீனப் படைப்பாளிகளுக்கும் உரிய இடம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது, ‘மையம்‘. ஓவியர் ஆதிமுலத்தின் ஒவியங்களை வெளியிட்டு, ‘ஆதிமூலத்தின் அக உலகம்‘ என்றொரு கட்டுரையைப் பிரசுரித்தது. ஆனால் ‘மையம்‘ நீடித்து வளரவில்லை.

எண்பதுகளில், கோவையிலிருந்து வெளிவந்த ‘உயிர் மெய்‘ வித்தியாசமான ஒரு பத்திரிகையாகக் காணப்பட்டது. ‘I try to disturb you and get disturbed in the process’ என்று மிருணால் சென் கூறினார்; ‘இதுதான் உண்மையான கலையின்—கலைஞனின் எதிர்பார்ப்பும்‘ என்று அறிவித்த உயிர்மெய், வித்தியாசமான விஷயங்களைக் கொடுக்க முயன்றது; ஆனால், நீண்டகாலம் உயிரோடு உலாவவில்லை.

எழுபதுகளில், பேராசிரியர் நா. வானமாமலை ‘ஆராய்ச்சி‘ என்ற காலாண்டிதழை நடத்திவந்தார். பல்கலைக்கழக ஆய்வுகளின் ரீதியில் தமிழ் நாவல்களையும் சமூக—பொருளாதாரப் பிரச்சினைகளையும் மார்க்சியக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்யும் கட்டுரைகளை, ‘ஆராய்ச்சி‘ வெளியிட்டது. நா. வா. இறந்த பிறகு, தேங்கி நின்ற இந்த இதழ், எண்பதுகளில், நா. வா. ஆராய்ச்சிக் குழுவினரால் மீண்டும் கொண்டு வரப்பட்டது. அவர்கள், இதழின் பெயரை, ‘நாவாவின் ஆராய்ச்சி‘ என்று மாற்றிக் கொண்டார்கள். இக்காலாண்டிதழ், தரமான விஷயங்களைத் தாங்கித் தொடர்ந்து பிரசுரம்பெற்றது.

மார்க்சியப் பார்வையுடன் சோஷியலிஸ்ட் ரியலிச இலக்கியம் படைக்க முயல்கின்ற முற்போக்கு எழுத்தாளர்களை ஊக்குவித்து, முற்போக்கு இலக்கியப் பணி புரிகிற ‘தாமரை‘, ‘செம்மலர்‘ பத்திரிகைகள், எண்பதுகளிலும், தங்கள் பணியை வெற்றிகரமாகச் செய்துவந்தன.

முற்போக்கு அம்சங்களோடு தீவிரமாகச் செயற்படுகிற மன—ஓசை, புதிய கலாச்சாரம், கேடயம் போன்ற இதழ்களும் வளர்ச்சிப் பாதையில் தடம்பதித்துள்ளன.