பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

வல்லிக்கண்ணன்


ஆகவே, ‘இருவேறு உலகத்து இயற்கை‘ என்ற நியதி பத்திரிகையுலகிலும் நிலைபெற்றுள்ளது என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.

அதாவது, ஆழ்ந்த, கனமான இலக்கிய— கலை— கலாச்சார— சமூகச் சிந்தனைகளை விரும்பிப் பிரசுரிக்கிற சிற்றிதழ்கள் எப்போதும் குறைந்த வாசகர் வட்டத்தையுடைய தனி இனம்தான். ஜிலுஜிலுப்பும் விறுவிறுப்பும் பரபரப்பும் கிளுகிளுப்பும் மசாலாக்களாகச் சேர்கிற ‘லைட்ரீடிங் மேட்டரை‘ மட்டுமே வெளியிடுகிற, வியாபார வெற்றிபெறுகிற ஜனரஞ்சகப் பத்திரிகைகள், மிகுந்த அளவு வாசகர்களை வசீகரிக்கும் சக்தியாக விளங்குகின்றன.

இருப்பினும், இலக்கியத் தாகத்துடன் கனமான விஷயங்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் நாடுகிற உள்ளத்தோடு, வலிந்து சிரமங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளச் சித்தமாக இருப்பவர்கள் இப்போதும் உள்ளனர். இது மகிழ்ச்சிக்குரியது. இல்லாவிடில் ஆங்காங்கே உற்சாகத்தோடு புதிய முயற்சிகள் தலைதூக்குமா என்ன?

புதுக்கோட்டையில் ‘ஒரு’ என்ற சிற்றிதழ், சிவகங்கையில் ‘கவி‘ என்பது, பாளையங்கோட்டையில் பல்கலைக்கழக ஆய்வுரீதியான விஷயங்களுக்காகவே ‘மேலும்‘ என்ற இதழ், மிகுந்த கனமும் ஆழமும் கொண்ட சிந்தனைக் கட்டுரைகளை வெளியிடும் ‘நிறப்பிரிகை‘, நாடகத்துக்கென்றே ஒரு தனி இதழாக ‘வெளி‘, திருத்துறைப்பூண்டியிலிருந்து வெளிவரும் ‘தகழி‘ போன்ற சிற்றிதழ்கள் தோன்றியிருப்பது, நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.

இவை போன்ற கனமும் ஆழமும் கொண்ட புது முயற்சிகள் எனக்குத் தெரியவராமலே இன்னும் எத்தனையோ இருக்கவும்கூடும்.

1960களில், ‘சரஸ்வதி‘ பத்திரிகை பற்றி எழுதிய தி. ஜ. ர. (தி. ஜ. ரங்கநாதன்), ‘சிறுபத்திரிகைகள் குடிசைத் தொழில் போன்றவை’ என்று குறிப்பிட்டிருந்தார். குடிசைத் தொழில்களினுள்ளும் குட்டிக் கைத்தொழில் முயற்சிகள்போல அநேகம் சிற்றிதழ்கள் தமிழ்நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

முகம், சுட்டி, தாராமதி, சுந்தரசுகன், நண்பர் வட்டம் போன்ற இதழ்களை இவ்வகையில் குறிப்பிடலாம். சமூகம், அரசியல், மொழி, மற்றும் தனிமனிதப் பிரச்சினைகள் சம்பந்தமான கூரிய சிந்தனைகளைக் கட்டுரைகளாகவும், கேள்விபதில்கள் என்றும், கவிதை வடிவத்திலும்