பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

41


ஈழத்து எழுத்தாளர்கள் ஊழியனில் அதிகமாக எழுதினார்கள்.

1930-களில் கலைமகள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரது கதைகளை வெளியிட்டு வந்தது. சி. வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் போன்றவர்களது படைப்புக்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. அக்காலத்தில் இலங்கையில் வசித்த சோ. சிவபாத சுந்தரம் தமிழ்ப் பத்திரிகைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

இவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் கிராம ஊழியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டனர். சோ. தியாகராசா, மஹாகவி, நாவற்குழியூர் நடராஜன் போன்றவர்கள் கவிதைகள் எழுதினார்கள். சு. வேலுப் பிள்ளையும் மற்றும் சிலரும் கதை கட்டுரைகள் எழுதிவந்தார்கள். .

1944 ஊழியன் ஆண்டு மலர் ஒன்றை விசேஷமாகவும் வித்தியாசமாகவும் தயாரிக்கத் திட்டமிட்டோம். தமிழகத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் அனைவரது படைப்புகளோடும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட விரும்பினோம். அந்நாளில் பிரபல்மாயிருந்த ஈழத்து எழுத்தாளர்கள் பலரோடும் தொடர்பு கொண்டேன். சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், ராஜ அரியரத்னம், ச. பாகன் மற்றும் இளைய தலைமுறையினர் பலரும் அன்போடும் ஆர்வத்தோடும் ஒத்துழைத்தனர்.

பொதுவாக, தமிழ்நாட்டின் பெரிய பத்திரிகைகள் விசேஷ மலர் தயாரித்து வெளியிடுகிறபோது, அந்நாட்களில் முதன் முதலில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாத அய்யர் கட்டுரை அல்லது கதையைப் பெருமையுடன் பிரசுரிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் எழுத்துக்களை அச்சிட்டு மகிழ்ந்தன.

'கிராம ஊழியன்' ஆண்டு மலரில் அந்த வழக்கத்தை நாங்கள் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, இலங்கைத் தமிழ் எழுத்தாளர் அம்பிகை பாகன் எழுதிய கட்டுரையை முதலாவதாக அச்சிட்டோம். இது இலங்கை எழுத்தாளர்களுக்கும் இலக்கிய ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மலர் விஷய கனத்தினாலும் ரசிகர்களின் போற்றுதலுக்கு இலக்காயிற்று. வேளுர் கந்தசாமிக் கவிராயர் ( புதுமைப்பித்தன்) 'ஓகோ உலகத்தீர் ஓடாதீர்’ என்ற விறுவிறுப்பான கவிதை, ந. பிச்சமூர்த்தியின் மகா கவிகள், ச. து. சு. யோகியாரின் கவிதை, சிட்டியின் ரகளைக்