பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. சில தகவல்கள்



இத் தொடரில் இதுவரை குறிப்பிடப்பட்டுள்ள பத்திரிகைகள் பலவும் நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்திய காலத்தில் வெளிவந்தவை ஆகும்.

அதே காலத்தில் தோன்றி வளர்ந்த 'பெரிய பத்திரிகைகள்' வேறு வகை முயற்சிகள், எழுத்தாளர்களிடத்தும் எழுத்தின் மீதும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் அல்லது பாதிப்புகள் மற்றும் இவை போன்ற முக்கிய விவரங்கள் குறித்தும் தகவல்கள் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று இலக்கிய நண்பர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்தான் என்பதால் இங்கு பொதுவான சில தகவல்களை இணைக்கிறேன்.

இந்திய சுதந்திரப் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக மட்டுமே அமைந்திருந்ததில்லை. அரசியல், விடுதலை உணர்வோடு, சமூக சீர்திருத்த வேட்கையும், தனிமனிதப் பண்பாட்டு உயர்வு உணர்ச்சியும், தாய்மொழி வளர்ச்சி வேகமும் சேர்ந்தே செயல்பட்டன.

மொழி வளர்ச்சி உணர்வு பத்திரிகைகளின் வளர்ச்சிக்குத் துணை புரிந்தது. நாட்டு மக்கள் மத்தியில் அரசியல் விடுதலை உணர்ச்சி, சமூகச் சீர்திருத்த உணர்வு, பண்பாட்டு உயர்வு ஆகியவற்றைப் பரப்புவதற்கும், அவர்களைச் செயல்வீரர்களாக மாற்றுவதற்கும் பத்திரிகைகள் பயன்பட்டன.

பத்திரிகைகளின் வேக வளர்ச்சி மொழி மறுமலர்ச்சிக்கு உதவியது. இந்திய மொழிகள் பலவற்றிலும் வரலாற்று ரீதியாகக் காணப்படும் இந்தப் பரிணாமம் தமிழ்நாட்டிலும் செயல்பட்டது.

1930 களுக்கு முன்னரும், முப்பதுகளின் ஆரம்பத்திலும், இலக்கியப் பத்திரிகை என்று 'செந்தமிழ்', 'செந்தமிழ்ச் செல்வி', ‘ஆனந்த போதினி' ஆகிய பத்திரிகைகளே இருந்தன.

முந்திய இரண்டு 'வித்வான்கள்', பழந்தமிழில் புலமை பெற்றவர்கள் ஆகியவர்களது எழுத்துக்களையே ஆதரித்து வந்தன. ஆனந்த போதினி கம்பராமாயணம், திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற தமிழ்ச்