பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

47


மிதவாதப் பத்திரிகையாகச் செயலாற்றியது. 1950 களில் இது தன்னை ‘குடும்பப் பத்திரிகை' என்று கூறிக் கொண்டு, வணிக முறைகளைக் கையாண்டு வெற்றிகரமாக முன்னேறுவதில் அக்கறை காட்டலாயிற்று.

கனமான இலக்கியத் தன்மையையும் ஜனரஞ்சகப் போக்குகளையும் இணைத்து, பெரிய அளவில் ஒரு பத்திரிகையை நடத்தி லாபமும் வெற்றியும் காண முடியுமா என்று சோதனை பண்ணுவதில் க. நா. சுப்ரமண்யம் ஆர்வம் கொண்டிருந்தார். 1930 களில் அவர் 'சூறாவளி'யை, ‘விகடன்' போல், ஒரு வாரப் பத்திரிகையாக நடத்திப் பார்த்தார். பதினெட்டு இதழ்களோடு பத்திரிகை நின்று போயிற்று.

1940 களில், தொழில் அதிபர் ஒருவரது துணையோடு, சந்திரோதயம் பத்திரிகையை மறுமலர்ச்சி பண்ணிப் பார்த்தார் க. நா. சு.

‘விகடன்' பகுத்தறிவுப் போட்டியை ஒரு பந்தய பிசினஸ் ஆகவும், பத்திரிகையின் விற்பனையைப் பெருக்கக் கூடிய ஒரு சாதனமாகவும் நடத்திக் கொண்டிருந்தது. அந்நாட்களில் விகடனைப் பின்பற்றி வேறு சில பத்திரிகைகளும் போட்டிப் பந்தய பிசினஸில் ஈடுபட்டிருந்தன. ஆனால் வெற்றி பெற்றதில்லை. -

அவைகளில் 'சந்திரோதயம்' என்பதும் ஒன்று. நன்றாக நடைபெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த அது, மறுமலர்ச்சி 'மாதம் இரு முறை' பத்திரிகையாக மாறி இரண்டு வருஷங்கள் வந்தது. க. நா. சு. ஆசிரியர். சி. க. செல்லப்பா துணை ஆசிரியர். .

புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரம் இதில் தொடர்ந்து வந்தது. லா. ச. ரா. சில கதைகள் எழுதினார்.

பத்திரிகை எழுத்துலகத்தில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தி விட வில்லை.

க. நா. சுப்ரமண்யம் உலகத்துச் சிறந்த நாவல்கள் பலவற்றைத் தமிழாக்கி உதவினார். கு. ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன் மற்றும் சில எழுத்தாளர்கள் உலகத்துச் சிறுகதைகளை நல்ல முறையில் மொழி பெயர்த்துத் தந்தார்கள்.

அவற்றை நவயுகப் பிரசுராலயம், அ. கி. ஜயராமனின் ஜோதி நிலையம், அ. கி. கோபாலனின் தமிழ்ச் சுடர் நிலையம் போன்ற பதிப்புகங்கள் புத்தகங்களாக வெளியிட்டன.