பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

53


இலக்கியத்தில் நல்ல புலமையும் தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சியும் ஈடுபாடும் கொண்டவர். நாணல் என்ற பெயரில் கவிதைகளும் நாடகங்களும் எழுதி இலக்கியப் பிரியர்களின் பாராட்டுதலைப் பெற்றிருந்தார்.

அ. சீ. ரா. ஆசிரியராக இருந்து நடத்திய 'சிந்தனை' நல்ல மாதப் பத்திரிகையாகத் திகழ்ந்தது. அ. சீ. ரா. வின் படைப்புகள், ஜஸ்டிஸ் மகாராஜன் திருமூலர் பற்றி எழுதிய கட்டுரைகள், பல்வேறு விஷயங்களைப் பற்றிய சிந்தனைக் கட்டுரைகள், தரமான சிறுகதைகள், கவிதைகள் பத்திரிகைக்கு மதிப்பு சேர்த்தன. ஆயினும், எழுத்துலகத்தில் விசேஷமான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஜீவனுள்ள இலக்கியப் பத்திரிகையாக ‘சிந்தனை' வளரவில்லை. ஒரு வருஷம் வாழ்ந்து அது ஆண்டு மலர் ஒன்றைப் பிரசுரித்த பெருமையோடு கடையைக் கட்டிக் கொண்டது.

அதே மாதிரிதான் 'தேனி' என்ற மாதப் பத்திரிகையும். 'மணிக்கொடி' யில் எழுத ஆரம்பித்து, கவனிப்புக்கு உரிய எழுத்தாளராக வளர்ந்து, 'கலாமோகினி', 'கிராம ஊழியன்' வாயிலாகத் தனது படைப்பாற்றலை ஒளி வீசச் செய்த எம். வி. வெங்கட்ராம் நடத்திய மறு மலர்ச்சி இலக்கிய மாசிகை. கரிச்சான்குஞ்சு (ஆர். நாராயணசாமி ) துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கும்பகோணத்திலிருந்து வந்தது.

‘மணிக்கொடி' எழுத்தாளர்கள் சிலரும், 'கலாமோகினி', 'கிராம ஊழியன்' பத்திரிகைகளில் எழுதி வளர்ந்தவர்களும், வேறு சில புதியவர்களும் 'தேனி' யில் எழுதினார்கள். அந்த அளவுக்குத்தான் அது பயன்பட்டதே தவிர, சாதனைகள் என்று சொல்லும்படியாக எதையும் தேனீ செய்து விடவில்லை. ஒரு நல்ல பத்திரிகையாக இருந்தது அது. மற்றபடி பாதிப்பு அல்லது தாக்கம் எதுவும் அதனால் நிகழவில்லை. 'தேனி' யும் ஒரு வருடமும் சில மாதங்களும்தான் வெளிவந்தது.

1940 களின் பிற்பகுதியில் தோன்றி, பல வருடங்கள் வெற்றிகரமாக வாழ்ந்த ‘பொன்னி' என்ற இலக்கியப் பத்திரிகை பலரது நினைவில் இடம் பெற்றுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நினைவுகூரப்படுகிற வித்தியாசமான ஒரு பத்திரிகை.

அரசியல் அடிப்படையில் செல்வாக்குடன் வேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த திராவிடர் இயக்கத்தைச் சார்ந்த பத்திரிகை பொன்னி. பத்திரிகைத் துறையில் எழுத்தாளர்களும் பத்திரிகைக்காரர்களும் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்; உண்மையான