பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் வரலாறு சுவாரஸ்யமான பல உண்மைகளை வெளிப்படுத்தக் கூடியது. இலட்சிய நோக்குடைய ஒரு சிலரது விடாப்பிடியான முயற்சிகளையும், மவுனப் போராட்டங்களையும், அவர்கள் ஏற்றுக்கொள்கிற சிரமங்களையும் எடுத்துக்காட்டுவது அது. அதேசமயம அவர்களது தோல்வியையும் (தோல்வி என்ற சொல் சரியில்லை என்று தோன்றினால், செயல்முடக்கம் மற்றும் செயலற்ற தன்மையையும் இவ்வரலாறு பளிச்செனப் புலப்படுத்துகிறது.

சிறுபத்திரிகைகளின் வரலாறு முழுவதும் உற்சாகமான பத்திரிகை எழுச்சிகளையும், அவற்றின் 'சென்று தேய்ந்திறுதல்’ களையும், முடிவில் ‘அன்வெப்ட் அன்ஹானர்ட் அன்ட் அன்சங்' என்ற தன்மையில், அவை கவனிப்பற்று - பாராட்டுரைகளின்றி - நினைவு கூர்வாருமின்றி மறைந்து போக நேர்வதையும் கொண்டிருக்கிறது.

ஆனாலும், தெரிந்துகொண்டே கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்து, குன்றாத ஊக்கத்தோடும் குறையாத தன்னம்பிக்கையோடும், ஒன்றைச் சாதித்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடனும் செயல்பட்டவர்களின் கதையாகவும் இருக்கிறது இந்த வரலாறு.

ஒவ்வொரு சிறுபத்திரிகையின் முதலாவது இதழ் வெளியிடுகிற அறிவிப்பு எவ்வளவு நம்பிக்கையை, எவ்வளவு ஆசைக் கனவுகளை, எதிர்பார்ப்புகளை எல்லாம் முழக்கமிடுகிறது! ஆனால் அவை பொய்த்துப் போகும்படி காலம் விளையாடி விடுகிறது. தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் உழைக்க முனைந்தவர்களின் செயல்பாடுகள் பலவும் மறதிப்பாழில் மக்கிப் போகின்றன.

அது நியாயமில்லை, ஏதோ ஒரு உத்வேகத்தில் பணிபுரியத் துணிந்தவர்களின் சோதனைகள் மற்றும் சாதனைகள் குறித்து, அவர்களுக்குப் பின்வருகிறவர்கள் - அதே பாதையில் நடைபோட வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் - தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அவர்களது செயல் முயற்சிகளை ஒரளவுக்காவது பதிவு செய்ய வேண்டியதும் அவசியம்தான்.

இந்த என்னத்தோடுதான் நான் ‘தமிழில் சிறு பத்திரிகைகள்' கட்டுரைத் தொடரை எழுதலானேன். ‘தீபம்’ பத்திரிகை எனக்குத் தாராள இடம் தந்தது.