பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

61


ப. ஜீவானந்தம், நா. வானமாமலை, எஸ். ராமகிருஷ்ணன், சாமி சிதம்பரனார், க. கைலாசபதி, எச். எம். பி. மொஹிதீன் கட்டுரைகள்; சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், டி. செல்வராஜ், அகிலன், கி. ரா. ரகுநாதன் கதைகள்; கே. சி. எஸ். அருணாசலம், குயிலன், திருச்சிற்றம் பலக் கவிராயர் கவிதைகள்; தி. க. சி. எழுதிய நாடகம்; இவற்றுடன், கதகளி பற்றி எஸ். சிதம்பரம் எழுதிய நீண்ட கட்டுரை -( படங்களுடன்) இம்மலரின் உள்ளடக்கமாகத் திகழ்ந்தன.

இரண்டாவது ஆண்டில் இரண்டே இதழ்கள்தான் வெளிவந்தன. 1965 ஏப்ரலில் சாந்தி நின்றுவிட்டது.

நல்ல முற்போக்கு இலக்கியப் பத்திரிகை என்ற பெயரை ‘சாந்தி' பெற்றதே தவிர, அது எழுத்துலகில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதுவரை ‘சிறு பத்திரிகைகள் பலவும்- 'மணிக்கொடி'யிலிருந்து ‘சாந்தி' முடிய- உண்மையில் இந்நாட்களில் சிறு பத்திரிகை என்றதும் என்ன எண்ணம் எழுகிறதோ அந்தக் கருத்தில் நடத்தப்பட்டவை அல்ல என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

இப்போது ‘சிறு பத்திரிகை' என்றால் குறித்த ஒரு கொள்கைக்காக அல்லது நோக்கத்துக்காக, ஏறக்குறைய ஒத்த மனோபாவம் கொண்ட மிகச் சிலரை வாசகர்களாகக் கொண்டு, வெகு குறைவான பிரதிகளே அச்சடிக்கப்பட்டு (இருநூறு அல்லது முந்நூறு), சந்தாதார்களை மட்டுமே நம்பிப் பிரசுரமாகும் பத்திரிகை, 'தனிச் சுற்றுக்கு மட்டும்’ (For Private circulation only) என்ற நோக்கில் வெளிவருவது என்று பொருள் கொள்ளப்படுவது இயல்பாகி விட்டது.

மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், தேனீ, சரஸ்வதி, சாந்தி போன்ற பத்திரிகைகள் இந்நோக்கில் பார்த்தால், சிறு பத்திரிகைகள் ஆகமாட்டா.

இவை எல்லாம் சந்தாதார்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை. பத்திரிகைச் சந்தையில் விலை போக வேண்டும் என்றும் திட்டமிட்டு முயன்றன. தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் ஏஜெண்டுகள் நியமித்து, விற்பனையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டின. வியாபார ரீதியான ஏஜெண்டு இல்லாத ஊர்களில் தெரிந்தவர்களோ, நண்பர்களோ, வேண்டியவர்களோ ஏஜெண்டு மாதிரி செயல்பட்டனர். பத்து அல்லது இருபது