பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

65


வாசகர்களைத் தேடிப்பிடிப்பதுதான் எழுத்துக்கு நோக்கம். ஏனெனில், ‘பிடித்தமானது' என்ற சாக்கில் பொது வாசகர்களைத் திருப்திப்படுத்துவதற்கான வழிகளை 'எழுத்து' கையாளும் உத்தேசம் இல்லை. 'எழுத்து எனக்குப் பிடித்து இருக்கிறது' என்று சொல்லக்கூடிய வாசகர்கள் எங்கெங்கே இருக்கிறார்களோ அவர்களைத் தேடும் 'எழுத்து'. இலக்கிய வாசகர்களின் ஆதரவை எதிர்பார்த்து ஒரு துணிச்சலான முயற்சியாக வரும் 'எழுத்து' க்குத் தமிழகம் தன் அரவணைப்பைத் தந்து, அது ஏட்டின் பின் ஏடாக அடுக்கு ஏற வகை செய்யும் என்ற நம்பிக்கையுடன் இந்த முதல் ஏடு உங்கள் முன் வைக்கப்படுகிறது'.

இவ்விதம் கூறிக்கொண்டு, 'எழுத்து' முதலாவது இதழ் 1959 ஜனவரி மாதம் தோன்றியது. நல்ல வெள்ளைத்தாள். அட்டை கிடையாது. 50 பைசா விலை. ஆண்டு சந்தா 5 ரூபாய்.

'புதுமை இலக்கிய மாத ஏடு' என்று பொறித்துக்கொண்ட எழுத்து இலக்கிய விமர்சனத்துக்கே முக்கியத்துவம் அளிக்க விரும்பியது.

‘இலக்கிய ரசனை கருத்துப் பரிமாறுதல்களால்தான் தெளிவுபடும், வளரும் என்பது 'எழுத்து' க்கு நிச்சயமான கருத்து. வெறுமனே சர்ச்சைக்காகச் சர்ச்சையை எழுத்து தொடராது' என்று அறிவித்து, இலக்கியவாதிகளின் அபிப்பிராயங்களை அது வரவேற்றது.

இதனாலே 'இலக்கிய விமர்சனக்குரல்' என்று இடைக்காலத்தில் தன்னை அறிவிப்பதில் பெருமை கொண்டது. அப்புறம் 'இலக்கிய விமர்சனம், படைப்புத் துறையில் சோதனைகள்- இவற்றில் அக்கறை கொண்ட மாதப் பத்திரிகை' என்று தெரிவித்துக் கொண்டது.

ஆரம்பம் முதலே, விமர்சனக் கட்டுரைகளுடன், சிறுகதைகளையும் யாப்பில்லாக் கவிதைகளையும் வெளியிடுவதில் ஆர்வம் காட்டியது 'எழுத்து'.

விமர்சனக் கட்டுரைகளும், இலக்கிய விமர்சனம் பற்றிய கருத்துரைகளும் அதிகம் பிரசுரிக்கப்பட்டுள்ளன. செல்லப்பா இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை என்ற ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட விரிவான கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். விமர்சனத்தில் சோதனை என்ற டி. எஸ். இலியட் கட்டுரையை மொழிபெயர்த்துத் தந்தார். அவற்றோடு, கமலாம்பாள் சரித்திரம் பற்றிய நீண்ட விமர்சனக் கட்டுரையையும்,

த4