பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

வல்லிக்கண்ணன்


என்றே வருகின்ற ஏடு. இது போன்ற எடு தமிழுக்குப் புதிதல்ல; என்றாலும் 'நடை' பலவகையிலும் மாற்றம் உடையது என்பது வாசகரின் முதற் பார்வைக்கே புலனாகி இருக்கும். இந்த மாற்றம் 'நடை'யினது நோக்கத்தின் அடிப்படையில் எழுவதாகும்.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே 'நடை' யின் நோக்கம். இந்த இருவகை வளர்ச்சியிலும் நாட்டம் கொண்ட நண்பர் சிலரின் கூட்டு முயற்சியே இந்த 'நடை'. 'நடை' யின் நோக்கம் நிறைவேறவும் 'நடை' வெற்றியுடன் நடக்கவும் இக்கூட்டு முயற்சியில் வேறு சிலரின் துணையும் தேவை. இதற்கு எல்லா எழுத்தாளரையும் விமரிசகரையும் துணை செய்யுமாறு அழைக்கிறோம். சிறு கதை, கவிதை, கவிதை நாடகம், மொழிபெயர்ப்பு, திறனாய்வுக் கட்டுரை முதலியவற்றை நடை வரவேற்கிறது. ஓர் ஏட்டின் வெற்றிக்கு அடிப்படைத் தேவை வாசகரின் பேராதரவுதான். எனவே இலக்கியச் சுவைப்புக்குப் புகழ் பெற்ற தமிழ் மக்களைத் துணை புரியுமாறு அழைக்கிறோம்.”

நடை முதலாவது இதழில் வெளியான ஆசிரியர் அறிவிப்பு இது.

ந. முத்துசாமியின் சிறுகதைகளையும் நாடகத்தையும் நடை வெளியிட்டுள்ளது. சி. மணி, செல்வம் என்ற பெயரில் கவிதை, பழந்தமிழ் இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். புதுக் கவிதையும் யாப்பிலக்கணமும் பற்றிய சிறப்பு இணைப்பு குறிப்பிடத்தகுந்தது. வே. மாலி என்ற பெயரிலும் அவர் சோதனை ரீதியான கவிதைகள் எழுதியுள்ளார். நெஞ்சங்கவரும் கற்பனையும், அருமையான சொற்கட்டும். இறுக்கமான உருவ அமைதியும், நுணுகிய பார்வையும், ஆழ்ந்த பொருள் நயமும் கொண்ட ஜப்பானியக் கவிதைகள் செல்வம் மொழி பெயர்ப்பில் வந்தன.

‘எழுத்து' பத்திரிகையில் எழுதி வந்த வி. து. சீனிவாசன், இரா. அருள், எஸ். வைத்தீஸ்வரன் முதலியவர்கள் நடையில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்கள். வெ. சாமிநாதன் மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதினார்.

‘விருந்து' என்ற தலைப்பில் புத்தக மதிப்புரைப் பகுதி பிரசுரமாயிற்று. எடுத்துக் கொண்ட புத்தகம் பற்றி விரிவாகவே மதிப்புரை எழுதப்பட்டது.