பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

வல்லிக்கண்ணன்


வித்தை தெரிந்தவர்க் கெல்லா மின்று
வேலை இருக்குது பலவாக.
நம்
கையிலும் ரெண்டு காசுகளுண்
இனி
தமிழை எங்கே நிறுத்தலாம்

என்று கேட்டிருந்தது அக் கவிதை.

நா. கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராகவும், என். மகா கணபதி பப்ளிஷர் ஆகவும் செயலாற்றிய ‘கசடதபற’ வுக்கு ஞானக்கூத்தன், சா. கந்தசாமி, ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்), ந. முத்துசாமி, ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் முதலியவர்கள் ஊக்கத்தோடும் உற்சாகத்துடனும் உயிருட்டி வளர்த்தார்கள். .

‘சுயபிரக்ஞையோடு - தரமான இலக்கியத்தை இனம் கண்டு கொள்ளும் வாசகர்கள், களைகள் மண்டிய இந்தச் சூழ்நிலையிலும் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை இன்னும் வளர கசடதபற பாடுபடும்' என்று அறிவித்து, அம் முயற்சியில் ஆர்வமும் காட்டியது அது.

'கோபம் படைப்புச் சக்தியை வீணாய் எரிக்கிறது. ஆனால், இதற்காக இதைச் செய்கிறோம், இதன் விளைவு இது என்னும் திட நம்பிக் கையோடு கொள்ளும் கோபம் சக்திச் சேதமின்றி சேமிப்புச் சக்தியாக மாறும் வகையில் சுய பிரக்ஞையுடன் இக்காரியத்தில் மிக மிகமிக, அமைதியாக ஈடுபட இருக்கிறோம். எனவே, கசடதபற வில் தொடர்ந்து கோபம் ஒரு யோகமாகப் போகிறது என்று ந. முத்துசாமி முதலாவது இதழ்க் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

கோபம் பலபேர்கள்-பத்திரிகைக்காரர்கள், எழுத்தாளர்கள், பண்டிதர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், போலிகள், பம்மாத்துக்காரர்கள் போன்ற பல்வேறு இனத்தினர்-மீதும் சூடாகவும் சுவையாகவும் இலக்கிய நயத்தோடும் கசடதபற இதழ்களில் பாய்ச்சப் பெற்றுள்ளது.

புதுமையான சிறுகதைகள், புதுக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், இலக்கிய விமர்சனம், புதிய புத்தகங்கள் பற்றிய விரிவான மதிப்புரைகள், சோதனை ரீதியான நாடகங்கள் (ந. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி எழுதியவை). நாடகக்கலை, ஓவியக்கலை, கூத்து பற்றிய