பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

81


ஹீரோ ஒர்ஷிப்பில் மயங்காத, இலக்கிய ரீதியான ரசனையையும், சுயமரியாதையையும் நிரூபித்திருக்கிறார்கள் என்பது இரண்டாவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.”

புதிய ஓட்டம் பெற்ற ஞானரதம் இலக்கிய விஷயங்களிலும், இலக்கியவாதிகள் விவகாரங்களிலும் (சச்சரவுகளிலும்) அதிக அக்கறை காட்டி வந்தது. உரத்த சிந்தனை என்ற தலைப்பில், படைப்பாளிகள்-ரசிகர்கள் சந்திப்பை (ரசிகர்கள் கேள்விகளையும் படைப்பாளிகளின் பதில்களையும்) பிரசுரித்தது. இது இந்த இலக்கிய ஏட்டின் தனிச் சிறப்பு அம்சமாக விளங்கியது.

‘இலக்கிய அனுபவம்' என்ற தலைப்பில் புத்தகங்கள் அல்லது தனிப் படைப்புகள் பற்றி யாராவது விரிவாக அபிப்பிராயங்கள் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

ஞானரதம் 1974 முதல்பாதி வரை வெளிவந்து கொண்டிருந்தது. ‘உண்மையைத் தேடும் எழுத்தைவிட உயர்ந்த இலக்கியம் இல்லை.' என்ற வரியை லட்சியக் கொள்கையாகப் பொறித்திருந்த இந்த இலக்கிய ஏடு, கீழ்க்கண்ட கருத்தையும் ஒலிபரப்பி வந்தது.

‘மனிதர்களில் எத்தனை முகங்கள் உண்டோ அத்தனை விதமான நோக்கங்களும் பார்வைகளும் இலக்கியத்திலும் இருக்கவே செய்கின்றன. ஞானரதத்தின் நோக்கங்களுக்கும் பார்வைகளுக்கும் மாறுபட்டவைகளும் கூட இலக்கியமாக இருப்பின் இங்கு இடம்பெறும், ஏனெனில், ஞானரதத்தின் இலக்கே, உண்மையைத் தேடிக்கொண்டிருப்பது ஆகும்.

இலக்கிய விவகாரங்கள், இலக்கியவாதிகளின் சச்சரவுகள், வம்புகள், அக்கப்போர்கள் முதலியவைகளுக்கும் ஞானரதம் அதிகமாகவே இடம் அளித்திருக்கிறது. புதிய திறமையாளர்களை வரவேற்று ஊக்குவித்துள்ளது. சிறுகதைகளிலும் புதுக் கவிதைகளிலும் நல்ல அறுவடை கண்டிருக்கிறது. சோதனை முயற்சிகள் தாராளமாக இடம் பெற்றுள்ளன.

ஞானரதம், அதன் காலகட்டத்தில் க. நா. சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பா, ந. சிதம்பர சுப்ரமண்யம் ஆகியோரின் மணிவிழாச் சிறப்பிதழ்கள் வெளியிட்டு அப்படைப்பாளிகளைக் கௌரவித்தது.

படைப்பாளிகள் பலரும் ஞானரதத்துடன் ஒத்துழைத்தது, அதன் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் துணை புரிந்தது. பல வருட காலம் நடுவில் எழுதாதிருந்த சுந்தர ராமசாமி ஞானரதத்துக்கு அதிகமாகவே கதைகள், சுதந்திரச் சிந்தனைகள், கவிதைகள்- எழுதி உதவியுள்ளார்.