பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

85


ஆகவே, அச்சு அமைப்பிலும் தோற்றப் பொலிவிலும் அஃக் இதர சிற்றேடுகளை விடத் தனிச் சிறப்புடன் விளங்கும் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது.

4-வது இதழ் கவிதைச் சிறப்பிதழாகத் தயாரானது. அப்போது (புதுக்) கவிதை எழுதிக்கொண்டிருந்த பலரும் அதில் கவிதைகள் எழுதியுள்ளனர். கலாப்பிரியாவின் 'சக்தி' ஒன்பது பக்கங்களில் இடம் பெற்றது. அரூப் சிவராமின் பிரசித்தி பெற்ற கவிதை E-MC2 இந்த இதழில் வந்தது.

சிறு பத்திரிகைகள் சம்பந்தப்பட்ட ஒரு கசப்பான உண்மையை இங்கே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

'எழுத்து' பத்திரிகையில் ஆழமான எண்ணங்களை, சுய சிந்தனைகளை, தீவிரக் கருத்துக்களை கட்டுரைகளாக எழுதி இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் வெ. சாமிநாதன், தருமு சிவராம் ஆவர். பிறகு வந்த சிற்றேடுகளுடனும் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள். கால ஓட்டத்தில், அவர்களுடைய நோக்கும், திறமையும் திசை திரும்பித் தடம் புரண்டு தாறுமாறான பாதைகளில் வேகமாக ஓடலாயின. விமர்சனக் கலையை ஆரோக்கியமான முறையில் வளர்ப்பதற்கு மாறாக, இவ் இருவரும் 'விமர்சனம்' என்ற பெயரில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களையும் அவர்களை ஆதரித்த பத்திரிகைகளையும் தாக்கி எழுதுவதில் ஆர்வம் கொண்டார்கள். போகப் போக, ஒரு சில எழுத்தாளர்களைக் குறை கூறி எழுத முற்பட்டு சகல எழுத்தாளர்களையும் மட்டம் தட்டி இழிவுபடுத்துவதிலும், தேவையில்லாமலே தாக்குவதிலும் இவர்கள் உற்சாகம் காட்டலானார்கள். பரபரப்பு, அதிர்ச்சி, தடாலடித்தனம் தந்து, வாசகர்களில் பெரும்பலரை ஈர்த்து சுலபப் பெயர் பெறுவதில் ஆர்வம் பெற்றுவிட்ட இவ்விருவரும் நீளம் நீளமான கட்டுரைகள் எழுதி, சிற்றேடுகளின் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டதோடு, அவற்றின் வளர்ச்சியையும் பாதித்தார்கள்.

அஃக் பத்திரிகையும் அவர்கள் வலையில் சிக்கிக் கொண்டது. அதன் 5-வது இதழ் முதல் டி. அரூப் சிவராம், வெ. சாமிநாதன் பாதிப்பு அதிக அளவில் அமைந்தது. இந்த இதழின் பாதியை சிவராமின் கோணல்கள் கட்டுரையும், மறுபாதியை சாமிநாதன் கட்டுரைகளும் பிடித்துக் கொண்டுள்ளன.