பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


இவற்றுக்கான எதிரொலிக் கட்டுரைகளும், இவர்களின் புதிய தாக்குதல்களும் பின்வந்த இதழ்களில் தொடர்ந்தன. அஃக் பத்திரிகை ஒழுங்காக, மாதம்தோறும் வரமுடியாத நிலையையும் அடைந்தது.

என்றாலும், தரமான, சோதனை ரீதியிலான கதைகள், பிறமொழி நாடகம்-சினிமா பற்றிய கட்டுரைகள், கவிதைகள் பிரசுரிப்பதிலும் அஃக் சிரத்தை கொண்டிருந்தது. 8-வது இதழ் தருமு சிவராம் கவிதைச் சிறப்பிதழ் என்று வெளியாயிற்று, கண்ணாடியுள்ளிலிருந்து என்ற தலைப்புடன், சாமிநாதன் முன்னுரையோடு.

வண்ணதாசன், நகுலன், சார்வாகன், நா ஜெயராமன், ஆர். ராஜேந்திர சோழன் கதைகள் முதல் வருட இதழ்களில் பிரசுரம் பெற்றுள்ளன. கன்னட நாடகம் கிரீஷ்கர்னாடின் ஹயவதனா, ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம், ஸெர்கி ஐஸன்ஸ்டீனின் திரைப்படக் குறிப்புகள் பற்றியும் கட்டுரைகள் வந்தன.

அஃக்கின் 13வது இதழ் (இரண்டாவது ஆண்டுத் துவக்க இதழ்) 1974 டிசம்பர் மாதம்தான் வந்தது. முன்னரே அறிவித்தபடி, அது வடிவம் மாறியிருந்தது. 13-வது இதழ் முடிய பெரிய அளவில் வந்த ஏடு இப்போது, விகடன் அளவுக்கு மாற்றம் பெற்றது. இதழ்தோறும் விசேஷமான லினோகட் அட்டையில் வர்ணத்தில் அச்சிடப் பெற்றது.

இந்த இதழ் சிறப்பாக அமைந்துள்ளது. அரூப் சிவராம் மூன்று கவிதைகள், நாடகக் கட்டுரை பற்றிய கோபாலி எழுதிய விளக்கம் சில பக்கங்கள், ந. முத்துசாமி கதை வண்டி, ராபர்ட் ஃபிராஸ்டின் சில கவிதைகள், சுந்தர ராமசாமியின் புதிய கதைகள் பற்றிய நா. ஜெயராமன் சிந்தனைகள், வே. மாலி கவிதை ஒன்று, மோகன் ராகேஷின் நாடகங்கள் பற்றிய எஸ். என். கணேசன் கட்டுரை, கலாப்பிரியா கவிதை ஒன்று. உள் பக்கங்களிலும் நவீன சித்திரங்கள் கலர்களில் அச்சாகியிருந்தன.

14-வது இதழ் (ஜனவரி-மே 1975 ) இந்திரா பார்த்தசாரதியின் போர்வை போர்த்திய உடல்கள் நாடகம் மட்டுமே கொண்டிருந்தது.

15-வது இதழ் (ஜூன்-டிசம்பர் 1975) ந. முத்துசாமி கட்டுரை, அரூப் சிவராம் கட்டுரை ஆகிய இரண்டு மட்டுமே கொண்டிருந்தன.

அதன் பிறகு பத்திரிகை ஒழுங்காக வரவில்லை. திடீரென்று எப்பவாவது ஒரு இதழ் வரும்.