பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

91


கி. ராஜநாராயணன், பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், நீல. பத்மநாபன், மாலன், வா. மூர்த்தி, ஸிந்துஜா, இரா. கதைப்பித்தன், காசியபன் மற்றும் பல புதிய எழுத்தாளர்கள் கதைகள் எழுதியுள்ளனர்.

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்தன. ஒரு கதையும் அச்சாயிற்று.

காரை சிபி, தமிழவன் கட்டுரைகளையும் நீலக்குயில் வெளியிட்டுள்ளது. விமர்சனக் கட்டுரைகளைப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டியது. அந்தச் சமயத்தில் வெளிவந்த அநேக புத்தகங்களைப் பற்றிய விரிவான, நேர்மையான அபிப்பிராயங்களை எழுத்தாளர்கள் கட்டுரையாக்கியிருக்கிறார்கள்.

முதல் இதழில் வெளியான 'ஸிம்பலிலம்' கட்டுரையைத் தொடர்ந்து இதர பல 'இசம்'கள் பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தால் பயனுள்ளதாக அமைந்திருக்கும். அத்தகைய கட்டுரை அப்புறம் வரவேயில்லை.

அதேபோல, முக்கியமான ஒரு விஷயம்-எழுதப்பட வேண்டிய ஒரு ஆய்வு-குறித்து இரண்டாவது இதழில் அறிவிப்பு வந்தது.

‘சிறுகதை : சில புதிய சேர்க்கைகள், (ஆய்வுத்தொடர் ) கோ. ராஜராம் எடுத்துப் பேசும் இளைய முகங்கள்; அஸ்வகோஷ், வண்ணதாசன், பூமணி, ம. ராஜாராம், வண்ண நிலவன், சா. கந்தசாமி.'

எதிர்பார்க்க வைத்த இந்த அறிவிப்பு பின்னர் செயல் மலர்ச்சி பெறவில்லை. இப்படி ஒரு ஆய்வு வந்திருந்தால், நீலக்குயிலின் இலக்கியத் தரம் சிறப்புற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் பற்றிய முறையான ஆய்வு இலக்கியப் பத்திரிகைகளில் எழுதப்பட்டதேயில்லை. 'கிராம ஊழிய' னில் சில கதாசிரியர்கள் பற்றிய கட்டுரைகள் வந்தன. 'எழுத்து' மணிக் கொடிப் படைப்பாளர்கள் சிலரைப் பற்றிய ஆழமான ஆய்வுகளை வெளியிட்டது. தி. க. சிவசங்கரன் 'மணிக்கொடி எழுத்தாளர்கள்' பற்றி தாமரையில் தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். இவை தவிர வேறு முயற்சிகள் இலக்கியப் பத்திரிகைகளிலும், பிற்காலத்திய சிறு பத்திரிகைகளிலும் செய்யப்படவேயில்லை. இது பெரும் குறை ஆகும்.