பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

93


'புதிய உத்வேகம்'

'அச்சகத்தை நவீனப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதம், நமது சொந்த சோம்பேறித்தனங்கள், பொதுவாகத் தமிழ் இலக்கிய உலகில் நிலவிவரும் மந்த நிலைமை ஆகியவை நீலக்குயிலைக் காலாண்டு இதழாக மாற்றிவிட்டன.

இலக்கிய உலகில் ஒரு காலகட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, அல்லது பத்திரிகையைச் சாதாரணமாக வெளியிட்டதையே ஒரு பெருமையாக ஏற்றுக் கொண்டு, பின்னர் திடீரென்று நிறுத்திவிடுவதற்காக நீலக்குயில் துவக்கப்படவில்லை. அதன் எதிர்காலத் திட்டங்கள் விரிவானது. ஆனால், விரைவானதல்ல. நீலக்குயில் மெய்யிலக்கியங்களின் மேடை என்பதில்தான் அது பெருமைப்பட விரும்புகிறதேயன்றி, மாத இதழா அல்லது காலாண்டு இதழா என்பதில் இல்லை.

தேவையும் அவசியமும் ஏற்படும்போது இது போன்ற இன்னொரு அறிக்கையின் மூலம் மறுபடியும் மாத இதழாக மாற்றிவிடுவது என்பது என்றேனும் ஒருநாள் எதிர்பார்க்க வேண்டியதே.'

எதிர்பார்க்கச் சொல்வதை 'நீலக்குயில்' நிச்சயமாகச் செய்யாது என்பதையே காலம் மீண்டும் நிரூபித்தது.

23-வது இதழ் தரமான தயாரிப்பாக அமைந்திருந்தது.

‘சிறந்த எழுத்துக்களைப் படைத்த பசித்த வயிறுகள்'-ஒரு குறிப்பு: ஏ. ஏ. ஹெச். கே. கோரி கவிதை வல்லிக்கண்ணன் கதை 'ரசிகன்', அகல்யாவின் அபிப்பிராயங்கள்; சோவியத் வீர விருது பெற்ற தென்னிந்தியர் பற்றிய ஏ. ஏஸ். மூர்த்தி கட்டுரை, ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலிலிருந்து சில பக்கங்கள், உமாபதி கவிதை 'என் தம்பி'-இவை இவ் இதழில் உள்ளன.

'கோபல்ல கிராமம்' நாவல் பற்றி நகுலன் எழுதிய மதிப்புரை சீனக் கவிஞன் வாங் வெய் கவிதைகள்; துரை சீனிச்சாமி தமிழில்; மற்றும் சில கதைகள் ஆகியவற்றைத் தாங்கி வந்த 24-வது இதழ் தான் (அக்டோபர் 1976) கடைசியாக வெளிவந்த இதழாகும்.

25-வது இதழ் தயாரிக்கப்பட்டது. ஆனாலும் அதை திரு. அண்ணாமலை வாசகர்களுக்கு அனுப்பவேயில்லை. பத்திரிகைப் பிரசுரம்

அவருக்கே அலுத்துவிட்டது போலும்.