பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

97


சதங்கை குடும்பம் ஒத்துழைக்க வேண்டும், மாறுபட்ட கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுத்து வெளியிடுகிறோம்- அது தரமாக இருப்பதால், இலக்கிய தர்மத்தை மீறாத இலக்கிய சர்ச்சைகளைக்கொண்ட கட்டுரைகளை வரவேற்கிறேன்'.

இலக்கிய சம்பந்தமான அபிப்பிராயங்களையும் எதிரான கருத்துக்களையும் வெளியிட்ட பல கட்டுரைகள் சதங்கையில் வெளிவந்துள்ளன. அவ்வக் காலங்களில் பிரகரமான சில சில புத்தகங்களைப் பற்றிய சிலரது விமர்சனங்கள் பிரகரமாகியிருக்கின்றன.

பல ரகமான கதைகள்- சோதனை முயற்சிகளும்கூட வெளி வந்துள்ளன.

ஆரம்ப வருடங்களில் மரபுக் கவிதைகளே இடம் பெற்றன. பிறகு புதுக் கவிதைகள் மட்டுமே சதங்கையில் பிரசுரமாயின.

‘சதங்கை' அவ்வப்போது சிறிய அளவில் ( தீபாவளி மலர் என்றோ, பொங்கல் மலர் என்றோ) விசேஷ மலர் தயாரித்துள்ளது. தரமான கதைகள், கட்டுரைகள், கவிதைகளை வெளியிட்டிருக்கிறது.

கிருஷ்ணன் நம்பி ஒன்றிரண்டு கதைகள் எழுதினார். கிளிப் பண்டிதரின் குறிப்புகள் என்று அக்கப்போர் பண்ணினார். 1976 ஜூன் மாதம் அவர் அகால மரணமடைந்தார்.

1976 ஆகஸ்ட் 'சதங்கை' கிருஷ்ணன் நம்பி நினைவு மலராக வந்தது. 14 பக்கங்களில், 'நம்பி எனும் நண்பர்' என்று வனமாலிகை ஒன்றரைப் பக்கம் எழுதியிருந்தார். நம்பியின் 'இரண்டு முன்னுரைகள்_-மறு பிரசுரம். 'கிருஷ்ணன் நம்பியின் கதைகள்' பற்றி நகுலன் எழுதிய பக்கக் கட்டுரை.

வேறு எந்தப் படைப்பாளி பற்றியும் 'சதங்கை' மலர் தயாரித்ததில்லை, அதன் பல வருட ஆயுளில்.

‘சதங்கை' 1982 வரை வந்து கொண்டுதான் இருந்தது. 1971-ல் தோன்றிய பத்திரிகையின் 75 வது இதழ் 1982 செப்டம்பரில் வரவிருக்கிறது- சிறப்பு மலராக என்று அறிவிக்கப்பட்டது.