பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 செயல்களைப் பற்றற்றுச் செய்ய வேண்டும். பற்றுதலும் எதிர்பார்ப்பும் குறையும்போது வேலைகளுக்கிடையே ஒருவித மனஅமைதி உண்டாவதை உணராலம். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றார் ஒரு சிவனடியார். கடமையை – தனக்குரிய கர்மத்தை ஆற்றாமல் மன அமைதி கிட்டாது. சலனமற்ற அமைதியான மனம் புனிதமாகிறது. ஆத்ம சொரூபத்தை அறிதலும் அத்தகைய மனதுக்கு எளிதாகிறது. ஞானியரும் கர்மம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. முற்றிலும் துறந்துவிட்டேன் என்று சொல்பவரும் ஏதேனும் ஒரு வகையில் கர்மம் செய்தாக வேண்டும். அவர்கள் கருமம் செய்தலும் உலகத்தவர் கர்மம் செய்தலும் பண்பில் வேறானவை. பயன் தருவதில் வேறானவை. ஞானியர் வினையாற்றுதலில் இன்னொரு சிறப்புண்டு. ஞானக் கண்ணுடையவர்கள் கர்மத்தைத் தவறுதலின்றிச் செய்யவல்லவர் ஆவர். கர்மம் செய்தே முன்னேற்றம் அடைய வேண்டிய உலக மக்களை நல்வழியில் அழைத்துச் செல்ல அவர்களால் முடியும். எனவே அவர்களும் கர்மம் செய்வது தேவையாகிறது. நல்லொழுக்க நெறியில் நின்று தன் கர்மங்களைச் செவ்வனே ஆற்றுபவன் மேலான மனிதனாகப் போற்றப்படுகிறான். மக்கள் அவனை மாதிரி மனிதனாக. அவன் செய்வதை முன் மாதிரியாக ஏற்றுக்கொள்கின்றனர். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் பொறுப்பு அதிகமாகிவிடுகிறது. உடலை விட்டு உறுப்பு ஒன்றை எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படியே சமூகத்தை விட்டு மனிதன் பிரியமுடியாது. மனிதன் ஒரு சமுதாய விலங்கு. மனிதன் சமுதாயத்தின் இன்றியமையாத உறுப்பானவன். அவனுடைய எண்ணங்களும் செயல்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சமூகத்தைப் பாதிக்க வல்லவைகளாகும். ஆதலால்தான் ஒவ்வொரு மனிதனுடைய செயலும் நல்லதாக இருக்க வேண்டும். பிறருக்கு எடுத்துக்காட்டாக அமையவேண்டும். நற்செயல் புரிவதை ஆண்டவன் கட்டளையாகக் கருத வேண்டும். நன்மைகளையே செய்தல், ஓயாது உழைத்தல் முதலிய நல்வழிகளில் பெரியவர்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்படி நடப்பவர்கள் உலகில் மிகவும் குறைவாக இருக்கின்றனர். 'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்றார் ஒரு மூதாட்டி ஒருசிலராவது நன்முயற்சி உடையவர்களாக இருப்பதால்தான்