பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பாலியல் தத்துவம் (ஐந்திணைத் தத்துவம்) மொழியியல் அறிஞர்கள் அவரவர் மொழிக்கு மொழி இலக்கணம் மட்டுமே எழுதுவர். பொதுவாக எல்லா மொழியிலும் எழுத்து, சொல், யாப்பு என்பன பற்றியே இலக்கண நூல் விவரிக்கும். வரையறை செய்து இலக்கணம் கூறும். நந்தமிழ் மொழியில் மட்டுமே 'பொருள் இலக்கணம்' உரைக்கப்பட்டது. 'பொருள் இலக்கணம்' என்பது மொழி இலக்கணம் மட்டுமன்று; வாழும் முறையைப் பாடிய வாழ்வியல் இலக்கணமும் ஆகும். தமிழைப் போல் தொன்மையான எந்த ஒரு மொழியிலும் மனித இனத்தின் வாழ்க்கையில் நடைபெறுகின்றவற்றை இலக்கணமாக வகுத்தும் பகுத்தும் தொகுத்தும் பாடியதில்லை. தமிழுக்குப் பிந்தைய மொழிகளிலும் இந்த வழக்காறு இல்லை. மனித இனத்தின் வாழ்க்கையைப் 'பொருள்' பொதிந்ததாகக் கருதியவன் தமிழன். வையத்தில் வாழ்வாங்கு வாழ்தலே உயர்ந்த வாழ்க்கை என்று தெளிவு பெற்றவன். எனவே வாழ்க்கையை, தன்னை மேம்படுத்த உதவும் நல்ல பயிற்சியாக, பயிற்சிக்களமாக ஆக்குவதில் தேர்ச்சியும் புலமையும் பெற்றிருந்தவன் தமிழன். தெளிவும், புலமையும் வாழ்க்கை அனுபவங்களும் வாழ்க்கையை இருகூறாகப் பார்த்தன. ஒரு பகுதி அகவாழ்க்கை என்றும் இன்னொரு பகுதி புறவாழ்க்கை என்றும் போற்றப்பட்டன. அகமும் புறமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இருபக்கங்களாகும். அகம் புறத்திற்கு ஆதரவாகவும் புறம் அகத்திற்கு ஆதரவாகவும் விளங்கக் காணலாம். ஒரு பக்கம் இல்லாத நாணயம் செல்லாதது போலப் 'புறம்' மட்டுமே உள்ள வாழ்க்கை செல்லாது. 'அகம்' மட்டுமே உள்ள வாழ்க்கை செல்லாது. அதாவது முழுமையான திருந்தியமைந்த வாழ்க்கையாகாது. அகவாழ்க்கை "ஐந்திணை ஒழுக்கம்' என்று போற்றிப் பாடப்படும் மரபுடையது. அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். அன்பொடு புணர்ந்த