117 மாயையின் தோற்றங்கள் யாவும் இம்மை உலகம் அதாவது இகம் என்று பெயர் பெறுகின்றன. இதற்கு அப்பால் இருக்கும், இருப்பதாகக் கூறப்படும் பெருநிலைக்குப் பரம் என்று பெயர். இகத்தில் உள்ள இகப்பொருள் மனிதன். பரத்தில் உள்ள தனிப்பொருள் பரம்பொருள். இகம் பரம் இரண்டு பரத்துவத்தில் இடம்பெற்றிருக்கின்றன. திரையில் படம் தென்படுவது போல், கண்ணாடியில் பிம்பம் தோன்றுவதுபோல், பரத்துவத்தின் பிரபஞ்சம் என்னும் மாயை தென்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்தப் பிரபஞ்ச மாயையில் கட்டுண்டு கிடப்பதற்கு மனிதன் பிறக்கவில்லை. அவன் வாழ்க்கையின் குறிக்கோள் மாயையில் உழல்வது அன்று. பரமனைச் சார்ந்திருந்து, தன்சொரூபம் உணர்ந்து மாயையைக் கடந்து அப்பால் போவது குறிக்கோள் என்று சமயங்கள் வெவ்வேறு விதங்களில் விளக்கியிருக்கின்றன. மாயை கடக்கும் வழிகள் பலவாறு விளக்கப்படுகின்றன. விளக்கங்களில் உள்ள வேறுபாடுகள் முக்கியமானவை அல்ல. மாயைக்கு அதீதத்தில், அப்பால் இருக்கும் பரமனை அடைவதே முக்கியமானது. புத்தமதம், லோகாயத மதம், சார்வாக்கியமதம் போன்றவை மாயைக்கு அப்பால் ஒன்றுமில்லை என்று கூறுகின்றன. மாயைக்கு அப்பால் சூனியம் மட்டுமே இருக்கிறது என்று கூறுகின்றன. இவ்வாறு கூறுவதால் இவை மாயாவாத மதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மாயைக்கு அப்பால் பரம்பொருள் ஒன்று உண்டு என்று நம்புகின்ற மதங்கள் எல்லாம் பிரம்ம வாதத்தை கடவுள் உண்மை வாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. வைதீக மதங்கள் ஆறும் பிரம்ம வாதத்திற்கு உரியவை. புத்தமதமும் நாத்திக மதங்களும் மாயா வாதத்தோடு நின்று விடுகின்றன. - இகம், பரம் எனப் பொருட்களின் காட்சியானது இருதரப்படுகிறது. ஐம்பொறிகளைக் கொண்டும் அந்தக் காரணங்களைக் கொண்டும் நுகர்வது இகம். பின்பு ஞானக் கண் கொண்டு நுகர்வது பரம். இகத்தையும் பரத்தையும் ஏக காலத்தில் தரிசிக்க முடியாது. மாயையாகிய இகத்தில் மலம் என்னும் இயல்பு இடம்பெறுகிறது. 'மலம்' என்றால் நீக்க வேண்டியது என்பது ஒரு பொருள். இன்னொரு பொருள் அழுக்கு ஆகும். பரத்திலோ அது பரசொரூபமாக உருமாற்றம் அடைகிறது. மேன்மையடைகிறது.
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/125
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை