122 ஒரு காலத்தில் இருந்து மற்றொரு காலத்தில் எது இல்லாது போகின்றதோ அது பொய். அதைப்பற்றி ஆராய இன்னும் ஒரு படி மேலே போக வேண்டும். அதற்கேற்ற உவமை கனவினின்று கிடைக்கிறது. ஏழை ஒருவன் பணக்காரன் ஆகிறான். கனவு இருக்கும் வரையிலும் அது மெய் என்றே தோன்றுகின்றது. அப்படித் தோன்றினாலும் அது உண்மையில் மெய்யன்று. கனவிலே பணக்காரனான ஏழை உண்மையில் பணக்காரன் அல்லன். தன்னைப் பணக்காரன் என்று எண்ணியது வெறும் மயக்கம். கனவைப் பற்றிய இக்கருத்து நனவிற்கும் பொருந்துகிறது. உற்றார் உறவினர்களுடன் வாழ்ந்திருக்கும் வாழ்வு மெய்யென்று தோன்றுகின்றது. ஆனால் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மடிந்து போகின்றனர். அப்படி மடிந்து போனவர்கள் நாளடைவில் கனவில் தோன்றியவர்களுக்கு நிகராகக் காணப்படுகின்றனர். நாம் வாழ்ந்து வரும் பிரபஞ்ச வாழ்வு நீண்டதொரு கனவாம். முற்பகுதியில் வந்தவைகள் பிற்பகுதியில் கனவு போன்று மறைந்து விடுகின்றன. கடைசியில் இவ்வுலக வாழ்வு முழுவதுமே மறைந்து விடுகிறது. இங்ஙனம் யுக்தியின் மூலம் பிரபஞ்சம் பொய் என முடிவு கட்டுகிறோம். இறைவனுடைய மெய்யருளைப் பெற்ற பிறகு பொய்யான வாழ்வில் அதிக ஈடுபாடு வருவதில்லை. மெய்யான பரம்பொருளையே நாடும் மனப்பக்குவம் வாய்க்கிறது. இறைவா. மெய்க்காட்சிகளைத் தந்தருள்வாயாக என்பது இக்கண்ணியின் கருத்து. மாயையின் செயலான இருள்மலம் பற்றிப் பராபரக் கண்ணியில் உள்ளதை அறிவோம். காட்ட அருள் இருக்கக் காணாது இருள்மலத்து நாட்டம் எனக்கு வரல் நன்றோ பராபரமே (79) காட்சி இருவகைப்படுகிறது. ஒன்று அருள்காட்சி; மற்றது மருள்காட்சி. இவ்விருகாட்சிகளுள் ஒன்று நிலைபெறும்போது மற்றது மறைந்துவிடுகிறது. கயிற்றைப் பாம்பாகப் பொருள் படுத்துவது இதற்கு நல்ல உதாரணம். பாம்பாகக் கண்டபோது கயிறு இல்லை. கயிறாகக் கண்டபோது பாம்பின் காட்சி அகன்றுவிடுகிறது. அருளைச் சார்ந்திருப்பவனுக்கு மெய்க்காட்சி கிட்டுகிறது. அருளைச் சார்ந்திருத்தல் என்றால் என்ன? புறக்காரணமாகிய ஐம்பொறிகளும் அகக்காரணமாகிய மனதும் பரமனுக்கென்றே ஒப்படைக்க வேண்டும். உள்ளத்தில் நினைப்பது எல்லாம் பரமனைப் பற்றிய உணர்வேயாம். புறத்தில் புலப்படுபவைகள் எல்லாம் பரமனுடைய பெருமைகளாம். இத்தகைய இயல்பை உருவாக்குபவன் அருளைச் சார்ந்திருப்பவனாகின்றான்.
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/130
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை