பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 ஞானியரின் சொல் எப்போதும் தப்பாமல் நற்பயனே தரும். அவர் சொற்களில் சொற்சுவையை விடச் சொற்பயனே, முதன்மையாக விளங்கும். தோற்றத்தில் நேரிதாக இருக்கும் அம்பு கொலை செய்யும் தொழிலால் தீய பயன் தரும் கருவியாகும். வளைவுகளைப் பெற்றுள்ள இனிமையல்லாத தோற்றமுடைய வீணை இன்னிசையால் எல்லோர் மனத்தையும் மகிழ்விக்கிறது. தம் மக்கள் மழலைச் சொல்போல் இனியது யாழ் வீணை இசை. பார்வைக்கு நேரான அம்பு பயனால் கொடுமையானது. வளைவான வீணை பார்வைக்கு நேராக இல்லை. பயனால் இனிதாகிறது. பொருளின் பயனே கொள்ளத்தக்கது. கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல் குறள் 279) ஞானியர் மேலாந்தரமான உணர்வினராவர். உயிர் சிறப்புடைய நலன்கள் பெற உணர்வு தேவை. உணர்ச்சி வேறு. உணர்வு வேறு. உணர்ச்சி உடல் சார்புடையது. உணர்வு உயிர்ச்சார்புடையது. உணர்ச்சி தற்சார்புடையது. உணர்வு பிறர் நலச் சார்புடையது. உணர்ச்சி தீமையை விளைவிக்கும். உணர்வு தியாக இயல்பினது. நன்மையே செய்வது. ஆதலால் பிறர் நலம் விழையும் ஞானியர் உணர்வில் சிறந்து விளங்குவர். உலகியலில் எந்த ஒரு பொருளும் தனித்து இருப்பது இல்லை. தனித்திருப்பது வளர்ச்சிக்கு இடையூறு. முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. இதே தத்துவம் சமய இயலுக்கும் பொருந்தும். உயிர் தனித்திருப்பதில்லை. உயிருக்குச் சார்பின்றித் தனித்திருக்கும் இயல்பும் ஆற்றலும் இல்லை. உயிர் உலகப்பொருள்களைச் சார்ந்து, அவற்றை அனுபவிக்க வேண்டும். அல்லது இறைவனுடைய திருவருளைச் சார்ந்து திருவருள் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். இஃது உயிரின் இயற்கை. உயிர் திருவருளைச் சார்ந்திருப்பது திருத்தத்திற்கும் உய்திக்கும் வழிவகுக்கிறது. முழுக்க முழுக்க உலகியலைச் சார்ந்திருப்பது துன்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. உலகியல் வசப்பட்ட உயிர் எரியுள் அகப்பட்ட கட்டை போல அழிக்கப்படுகிறது. திருவருட்சார்பினைத் தழுவிய உயிர் விளையும் நிலத்திலே விழுந்த விதைபோல் விளைந்து சமுதாயத்திற்குப் பயன்தருகிறது. ஞானியர், துறவியர், தவம்புரிவோர் போன்றோர் உயிரும் திருவருட் சார்பினால் மனித குலத்திற்குப் பெரும்பயன் தரும்.