33 அமைப்பிற்கு அடிப்படை செல் அமைப்பு ஆகும். உடம்பினுள் உடம்பாய் இருந்து உருவத்தையும் இயக்கத்தையும் தருகின்ற இச்செல்லை வெறுங்கண்களால் காண இயலாது. உருப்பெருக்கி (microscope) என்கிற நுண்ணோக்கி வாயிலாகத்தான் காண முடியும். நுண்ணோக்கி ஒரு செல் அமைப்பைப் பல ஆயிரம் மடங்கு உருப்பெருக்கம் செய்தபிறகுதான் கண் அதனைப் பார்க்கமுடியும். பார்த்து அதனுள் பொதிந்துள்ள இன்னும் பல செல் நுண்பொருள்களைக் காண இயலும். மிகமிக நுட்பமானவை செல்லும் அதனுள் அடங்கியிருக்கும் செல் நுண்பொருள்களும். செல்கள் பல இணைந்தும், பிணைந்தும் 'திசு' என்ற அடுத்த நிலை அமைப்பு உருவாகிறது. செல்லைவிடப் பெரியது திசு. திசு தனித்தனி உறுப்புகள் உருவாவதற்கு உரிய கட்டுமானப் பொருள் ஆகும். எலும்பை உருவாக்கும் திசு எலும்புத் திசு. நரம்பை உருவாக்கும் திசு நரம்புத்திசு. தசையை உருவாக்கும் திசு தசைத்திசு. தோலை உருவாக்கும் திசு தோல்திசு. இதயத்தை உருவாக்கும் திசு இதயத்திசு. உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் போன்றவற்றைக் குடல் திசு உருவாக்குகிறது. இரத்தத் திசு இரத்தத்தைத் தருகிறது. இவ்வாறே உடலின் கட்டுமானப் பணியில் பெரும்பங்கு திசுக்களுடையதே ஆகும். ஒரே பணியைச் செய்யும் திசுக்கள் ஓர் உயிரியல் ஒழுங்கில் அமைந்து உறுப்புகளை (Organs) உருவாக்கம் செய்கின்றன. இதயம் ஓர் இன்றியமையாத உறுப்பு. நுரையீரல் ஓர் உயிர் வளர்க்கும் உறுப்பு. தலைமை உறுப்பாக அமைந்திருப்பது மூளை. கண்ணும், காதும் அறிவு வாயில்களாக அமைந்த உறுப்புகள். கண்ணில் பார்வைத் திசுக்கள் பார்வைக்கு உதவும். செவியில் உள்ள திசுக்கள் ஒலியை உணரும் ஆற்றல் உடையன. எல்லா உறுப்புகளிலும் நடைபெறும் செயல்களை மூளைக்கும் அறிவிக்கும் செய்தித் தொடர்பாளர் பணியைச் செய்வது நரம்புத்திசு. இரத்தத்திசு இரத்தக்குழாய்களில் எங்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே உறுப்புகளுக்கு ஊட்டச்சத்தை ஊட்டி வேண்டாதவற்றைச் சுமந்து கொண்டு வந்து கழிவைக் கழிவு உறுப்புகளில் கொட்டி வெளியேற்ற உதவுகிறது. ஒட்டாமல் ஓடும் திசு இரத்தத்திசு. இங்ஙனம் உடலுக்குள் பல்வேறு பணிகளைத் திசுக்களே மேற்கொள்ளுகின்றன.
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை