பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறந்தள்ளிவிடுவான். பசியால் பண்பிழக்கும் வேதனையைப் பண்டைத் தமிழ்நூல் மணிமேகலை கண்ணீர் மல்க வைக்கும் துயரக் காட்சியாகக் காட்டுகிறது. குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணணிகளையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி 37 (மணிமேகலை பாத்திரம் பெற்ற காதை) கடும்பசியால் உருக்குலைந்து வாடித் துடிக்கும் ஒருவன் ஒரு பிடி சோற்றுக்காகத் தான் பிறந்த குடிப்பெருமையைத் தூக்கி எறிந்து விடுவான். படித்ததை எல்லாம் மறந்துவிடுவான். மான வெட்கத்தை விட்டுவிடுவான். கூச்சமில்லாமல் பெண்டு பிள்ளைகளுடன் பிறர் வீட்டில் சோற்றுக்காக அலைய வைப்பான் பசிப்பிணி என்னும் பாவி. நீரின்றி வாடும் பயிரினையும் சோறின்றித் தவிக்கும் மனிதனையும் கண்டு உளம் வருந்தினார் வடலூர் வள்ளல். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன், வீடுதோறும் இரந்தும் பசி அறாத வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்" என்று வருத்தந் தோயப் பாடுகிறார். அதனால் பசித்து வந்தோர்க்கு உணவு அளிக்கத் தருமசாலை நிறுவினார். இன்று வரை பசி நீக்கும் நல்லறம் நடந்து வருகிறது. ஆபுத்திரனும், மணிமேகலையும் அட்சய பாத்திரங்கொண்டு பசிப்பிணி போக்கும் அறத்தில் ஈடுபட்டனர். ஊர்தோறும் ஊர்தோறும் சென்று மணிமேகலை "கண்ணில்லாதவர்களே வாருங்கள். காது கேளாதவர்களே வாருங்கள், கைகால் முடம் ஆனவர்களே வாருங்கள். உணவளித்துப் பாதுகாக்கும் உறவினர் இல்லாதவர்களே வாருங்கள், பிணியால் நடுங்கிக் கொண்டிருப்பவர்களே வாருங்கள், பசித்தோர் எல்லோரும் வாருங்கள். வயிறார உண்ணுங்கள்" என்று கூவியழைத்து. வருந்தி அழைத்து உணவிட்டாள். ஆபுத்திரனும் மணிமேகலையும் பசியின் கொடுமையையும் தீமையையும் உணர்ந்து உணவறம் மேற்கொண்டு உயர்ந்தனர். நோன்பு இருக்கிறேன், விரதம் இருக்கிறேன் என்று எந்தவித உணவும் உட்கொள்ளாமல், நீரும் அருந்தாமல் பல வேளைகளில்