7. ஆனந்தம் என்னும் தத்துவம் உடல் அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமய கோசம். விஞ்ஞான மய கோசம், ஆனந்தமயகோசம் ஆகிய ஐந்து கோசங்களை உடையது. இவ் ஐந்து கோசங்களையும் தூய்மைப்படுத்துதல் பஞ்ச சுத்தி ஆகிறது. நிலம், நீர், தீ, வளி வான் ஆகிய ஐந்து பூதங்களால் (பொருள்களால்) கட்டுப்பட்டது இவ்வுடம்பு. இந்த ஐந்து பூதங்களை முறையாகக் கையாளுவது பஞ்ச சுத்தி ஆகிறது. மேலும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்(மணம்) என்ற ஐம்புலன்களைப் பண்படுத்துவதும் பஞ்ச சுத்தி எனப் பெயர் பெறுகிறது. நெறியான வாழ்க்கையின் மூலம் மனிதன் உடலைப் புனிதம் வாய்ந்ததாகப் பண்படுத்திக் கொள்ள முடியும். அப்பொழுது பஞ்சசுத்தி என்னும் சாதனம் நன்கு பூர்த்தியாகிறது. பஞ்ச சுத்தி என்னும் சாதனம் நன்கு பூர்த்தியாவது என்பது ஆனந்தமய கோசத்தில் திளைப்பதற்கு வழிவிடுவது என்பதாகும். எலும்பும் சதையுமான உடலில் பிராணனும், பிராணனில் மனமும், மனத்தில் அறிவும், அறிவில் ஆனந்தமுமாக மனிதன் உருவெடுத்து இருக்கிறான். ஒன்றுள் ஒன்றாய் உறையும் இவ்வைந்து கோசங்களின் விரும்பப்படும் அடுக்கு ஆனந்தமய கோசம் அல்லது ஆனந்தமய அடுக்கு அல்லது ஆனந்தமய உறை உள்ளில் உள்ளாய் இருப்பது ஆனந்தமய கோசம். கோயிலின் கருவறையில் கர்ப்பக்கிரகத்தில் கொலுவிருக்கும் ஆண்டவன் போல் இருப்பது ஆனந்தமயகோசம். எல்லோரும் விரும்புவது கடவுள் தரிசனம். உலகத்தில் வாழும் ஓரறிஉயிர், ஈரறிவுஉயிர், மூவறிவு உயிர். நான்கறிவு உயிர், ஐந்தறிவு உயிர், ஆறறிவு உயிர், ஆகிய உயிர்க்குலங்கள் அவாவுவது இன்பமே. இன்ப நாட்டம், இன்ப விருப்பம், இன்ப விழைவு எனப் பலவாறாகக் கூறப்படுவது எல்லோருக்கும் பொதுவானதாகும். சிற்றறிவு உயிர்கள் முதல் பேரறிவு உயிரான மனிதன் வரை நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல், உண்டல், உறுதல், உயிர்தல் முதலான எல்லா முயற்சிகளும் இன்பம் அடைதலையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை