பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இன்பம் அடைவதற்குக் காரணமான கல்வியால், தொழிலால் உலகினரும் இன்பம் அடைவதால் அக்கல்வியை விரும்புவர்" என்பதாகும். தீதற்ற வழியிலே பொருள் ஈட்டினால் அப்பொருள் அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். அதனால்தான் 'செய்க பொருளை' என்றனர். கல்லார் இன்பமும் கற்றார் இன்பமும் அளவிலும் முயற்சியிலும் வேறுபடுகின்றன. எள்ளளவும் கல்வியில்லாத ஒருவன் பழமரத்தடியில் பசியுடன் நிற்கிறான். பசி கடுமையாக இருக்கிறது. 'பசி' ‘பசி' என்று வருந்திக்கொண்டிருக்கின்றான். யாராவது உணவு தரமாட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்கிறான். ஆயின் தலைக்கு மேலே தொங்கும் பழம் பசியாற்றுமே என்ற எண்ணம் எழவில்லை. வாங்கி உண்டே பழக்கப்பட்ட அவனுக்குப் பறித்துத் தின்று பசியாறலாமே என்று புலப்படவில்லை. பரமார்த்த குரு கதையில் வரும் சீடர் போன்று குதிரை முட்டையைத் தேடி அலையும் அறிவிலிகளால் இன்பம் அடைதல் அரிதாகும். இன்பம் என்று எண்ணிப் பெருந்துன்பத்திற்கே ஆளாவர். கொஞ்சம் அறிவுள்ளவன் அந்த மரத்தடியில் நின்றிருந்தால் கனியைப் பறித்துப் பசியாற்றிக் கொள்வான். அக்கம் பக்கத்தில் நிற்பவர்களுக்கும் கனிகளைப் பறித்துக் கொடுத்துப் பசியாற்றுவான். கற்றவர்களே சிறிதளவு முயற்சியிலே தாமும் இன்பமடைந்து பிறரையும் இன்பத்தில் ஆழ்த்துவர். அறிவினும் இன்பமே பெரியது. சிறந்தது. எனவே இன்ப வழிப்பட்டு நிற்கும் பக்தி நெறியே அறிவின் வழிப்பட்டு நிற்கும் ஞான நெறியினும் சிறந்ததாக விளங்குகிறது. மாங்கனியின் அருமையை அறிந்து நிற்கும் நிலையைப் போன்றது ஞானநெறி. மாங்கனியைப் பறித்துத் தின்று சுவைத்து அறிவது போன்றது பக்தி நெறி. சுவையும் இன்பமும் ஒரு சேரக் கிடைப்பதால் உலகில் பக்தி நெறியே எங்கும் பரவியிருக்கிறது. ஒரு பொருளின் அருமையை உணர்ந்தவன், அறிந்தவன் அதை அனுபவிக்காமல் இருக்க மாட்டான். ஆதலால் ஞானநெறியில் நின்றவன் பக்தி நெறியில் செல்லாமல் இருக்கமாட்டான். எனவே அறிவின் வயப்பட்டதாய ஞானமார்க்கம், இன்ப வயத்ததாய பக்தி மார்க்கத்தினைப் பிறப்பிக்கும் தாய் போன்றது. ஞானமார்க்கத்தின் சேயாய் இருப்பது பக்தி மார்க்கம். பக்தி மார்க்கம் காரிய அனுபவமாய், ஞானத்தினும் சிறப்புடையதாக விளங்கும் என்பது வெளிப்படையானது. கற்றோரினும் மிகவும் மேம்பட்டவர் தவ ஒழுக்கத்தினர். "உலகத்துப் பொருள்களின்