பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 தங்களுக்கென்று தேடுபவர்க்குச் செல்வம் சேர்ந்து பிறகு தங்களை விட்டுச் சென்று விடுகிறது. ஒன்றையும் எதிர்பாராது கொடுத்துக்கொண்டே இருப்பவர்க்குக் கொடைக்கு வேண்டிய செல்வம் தானே வந்தமைகிறது. அந்த மனப்பக்குவமே மணிமேகலையிடம் இருந்த அட்சயபாத்திரம் கொடுப்பதால் துன்பம் இல்லை. இதுதான் படைப்பின் மேலான திட்டம் என்பதை அனுஷ்டித்துப் பார்ப்பவர் அறியலாம். பொதுநலத்தையே வாழ்வாகக் கொண்டவர்களுக்கு எல்லாம் தாமே வந்தடையும். தடையின்றிப்பொருள் வந்து கொண்டேயிருக்கும். அவர்களுடைய மனதும் விரிவடைகிறது. மனது விரிவடைவது ஒப்பற்ற பேறாகும். மேலோர் என்பவர் தன்னலமற்றவராயிருப்பர். அவர்களது நல்ல முயற்சிகளில் துணையாய் நிற்பது யாகமாகிறது. கைம்மாறு கருதாது சான்றோர்களுக்குத் துணைபுரிகின்ற அளவு சான்றோர் அவர்களுக்கு உதவி புரிவர். சமூகத் தொண்டிலேயே மூழ்கி இருப்பவர்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் சமூகத்தார் வாரி வழங்குவதைக் கண்கூடாகக் காணலாம். ஒரு மனிதன் உலக நன்மைக்காகவே உயிர்வாழும் போது, உலகம் முழுவதும் அவனது நன்மையில் ஆர்வம் காட்டுகிறது. தனது பொறுப்பு என உணருகிறது. தெய்வத்தை மனிதன் எப்போதும் முழுமனதோடு வழிபட்டால், அத்தெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகும் பேறு கிட்டுகிறது. பிறர்க்கு மனிதன் எதை எடுத்து வழங்குகின்றானோ அதையே இயற்கையானது பலமடங்கு ஆக்கித் திருப்பித் தருகிறது. இப்படி ஒருவரையொருவர் பேணுதல் என்ற வேள்வியால் எப்போதும் பெரிய நன்மையே உண்டாகிறது. உலகில் பிறந்தது முதல் மண்ணில் மறையும் வரை ஒருவன் அனுபவிக்கும் நன்மைகள் யாவும் பிறர் செய்த நற்செயல்களின் பயனாகும். குழந்தை பேணி வளர்க்கப்படுகிறது. அது பெற்றவர் செய்த வேள்வியின் பயன். இளைஞன் கல்வி பெறுகிறான். கல்விக்கூடத்தை நிறுவியவரின் யாக பலன் அது. உண்ணும் உணவும் உடுத்தும் உடையும் இன்னும் விதவிதமான இன்ப நுகர்ச்சிகளுக்குண்டான பொருள்களும் மனிதனுக்குக் கிடைக்கின்றன. இவையாவும் மற்றவர் உழைப்பின் பயனாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கருமங்களும் கருமங்களால் இயற்றப்பட்ட வாழ்க்கையும் உலகுக்கு எப்படிப் பயன்படுகின்றன என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு மனிதனால் உலகம் எத்துணை அளவு