பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

97






பாடம் - 4

புணர்ச்சிகள்


4.0 முன்னுரை

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து வருவதனைப் புணர்ச்சி என்கிறோம். நீங்கள் சிறுவகுப்பில் சேர்த்தெழுது, பிரித்தெழுது முதலிய பயிற்சிகளைச் செய்திருப்பீர்கள். அவைதாம் புணர்ச்சி என அப்போது உங்களுக்கு யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அவற்றை, இப்போது நினைவுகூருங்கள்.

செய்யுட்பகுதிகளில் பிரித்தெழுத வேண்டிய சொற்கள் உண்டு. உரைநடையில் பெரும்பாலும் அவ்வாறு வருவதில்லை. எளிய சொற்றொடர்களே கையாளப்படுகின்றன. செய்யுள் அடிகள் யாப்பின் அடிப்படையில் அசை, சீர், தளை என அமைந்துள்ளன. அதனால், அவை புணர்ச்சி விதியின்படி அமைகின்றன. ஆயினும், பாடலடிகளிலுள்ள சில சொற்களைப் பொருள் விளங்கும்படி பிரித்துப் படித்தால், எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதேபோன்று, சில சொற்களைச் சேர்த்தே படிக்கவேண்டும். அவற்றைப் பிரித்தால் பொருள் மாறுபடும். அவ்வாறு பிரித்துப் படிப்பதற்கும் சேர்த்துப் படிப்பதற்கும் புணர்ச்சி தேவைப்படுகிறது.

"I

... பாரி ஒருவனு மல்லன்

மாரியும் உண்டீண் டுலகுபுரப் பதுவே"

புறநானூற்றில் இடம்பெற்றுள்ள இப்பாடல் அடிகளை எளிதாகப் பொருள் புரியும்படி,

"....பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே"

எனப் பிரித்துப் படித்தால், பொருள் நன்கு விளங்குகிறது. இங்கு நாம் பிரித்துள்ள சொற்கள் புணர்ச்சியின் அடிப்படையில் சேர்ந்துள்ளன. இவ்வாறு ஒரு சொல் மற்றொரு சொல்லுடன் சேர்ந்தும் பிரிந்தும் நாம் காணும் சொற்களைப் புணர்ச்சி என்கிறோம்.

4.1 ஒருமை, பன்மை

ஒரு பொருளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவதற்கு ஒருமையும் பன்மையும் பயன்படுகின்றன. ஒரு பொருளை மட்டும் குறிப்பது, ஒருமை. ஒன்றிற்கு மேற்பட்ட பொருளைக் குறிப்பது, பன்மை. ஒருமைச் சொற்களுடன் விகுதி சேர்த்துப் பன்மையாக்கலாம். நூல் என்பது ஒருமையானால், நூல்கள் என்பது பன்மையாகும். இவ்வாறு ஒருமையைப் பன்மையாக்க சில விதிமுறைகள் உள்ளன. பின்வரும் எடுத்துக்காட்டுகள்வழி புரிந்துகொள்ளலாம்.