தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
99
4.1.1 தொடர்களில் ஒருமை, பன்மை மயக்கம்
தனிச்சொற்களில் ஒருமை, பன்மை எவ்வாறு வரும் என்பதை அறிந்தோம். தொடர்களிலும் ஒருமை, பன்மைச் சொற்கள் இடம்பெறும்போது, அவற்றைப் பிழையின்றி எழுதவேண்டும். ஒருமையில் தொடங்கும் சொல்லுக்கு ஒருமை முடிபு தரப்பட வேண்டும். அதேபோல் பன்மையில் தொடங்கும் சொல்லுக்குப் பன்மை முடிபு தரப்பட வேண்டும்.
சிலருடைய பேச்சில் இத்தகைய ஒருமை, பன்மைப் பிழைகளை உங்களால் கண்டறிய இயலும். எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? நாம் பேசும்போது, எழுத்துத் தமிழில் பேசுவதில்லை. பேச்சுத்தமிழில்தான் பேசுகிறோம். இஃது எளிமை கருதி நிகழ்கிறது. இப்படிப் பேசுவதால், இதில் ஒருமை, பன்மைப் பிழை ஏற்படுவதாகக் கூறமுடியாது. பேச்சுத் தமிழாக இருந்தாலும் ஒருமை, பன்மை சரியாக இருக்கவேண்டும்.
"அங்க நாலுபேரு பேசிக்கிட்டு இருக்காங்க" என்றுதான் பேச்சுத்தமிழிலும் ஒருமை, பன்மைப் பிழையின்றிப் பேசுகிறோம்.
"அங்க நாலுபேர்கள் பேசிக்கிட்டு இருக்கான்" என்று நாம் பேச்சிலும்கூடப் பிழையாகக் கூறுவதில்லை.
நெல்லிக்காய் விற்கும் பெண்ணொருத்தி, "பத்து நெல்லிக்கா அஞ்சு ரூபா" என்று கூவி விற்கிறாள். இந்தத் தொடரில் பிழை உள்ளதா? பிழை இல்லை. அவள் இலக்கணம் படிக்கவில்லை. ஆனால், சரியாகத்தான் சொல்கிறாள். எப்படி?
ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்களைக் குறிக்கும்போது, பன்மைச் சொல்லாக்க விகுதிகள் சேர்க்கவேண்டும் என்றும் பார்த்தோம். இங்கு, ஒரே ஒரு நெல்லிக்காயைக் குறிக்க, நெல்லிக்காய் என்று கூறினால் போதுமானது. ஒன்றிற்கு மேற்பட்டு இருக்கும்போது, நெல்லிக்காய்கள் என்று கூற வேண்டும். சரியாகத்தான் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், பத்து நெல்லிக்காய் - இது சரியா, தவறா? சரிதான்.
ஒரு பொருளுக்குமுன் எண்ணுப்பெயர் அடையாக வரும்போது, ஒன்றிற்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் குறித்தால், அச்சொல்லைப் பன்மையாக்க வேண்டுவதில்லை.
இரண்டு மலர்கள்
இரு மலர்
பத்துப் பாட்டுகள்
பத்துப்பாட்டு
I
தவறு சரி
தவறு
சரி