தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
119
13. பத்தின் முன் ஒன்று முதல் எட்டு ஈறாகிய பிற எண்கள்
பத்தின் முன் இரண்டு நீங்கலாக ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்கள் வரின், உம்மைத்தொகையில் ஈற்று உயிர்மெய் கெட்டு, இன் சாரியை தோன்றும்.
பத்து + ஒன்று = பதினொன்று
பத்து + மூன்று = பதின்மூன்று
பத்து + நான்கு = பதினான்கு
பத்து + ஐந்து = பதினைந்து
பத்து + ஆறு = பதினாறு
பத்து + ஏழு = பதினேழு
பத்து + எட்டு = பதினெட்டு
14. பத்தின் முன் பத்து
பத்தின் முன் பத்து புணர இற்றுச் சாரியை தோன்றும்: அங்ஙனம் தோன்றுமிடத்துப் பத்து என்பதின் ஈற்று உயிர்மெய் கெடும்.
பத்து + பத்து = பதிற்றுப்பத்து
15. பத்து, ஒன்பதின் முன் ஆயிரம், நிறை, அளவுப்பெயரும், பிறவும்
பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், நிறைப்பெயரும், அளவுப் பெயரும், பிறபெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச் சாரியை மட்டுமின்றி இன் சாரியையும் தோன்றும்: அங்ஙனம் தோன்றுமிடத்துப் பத்து என்பதன் ஈற்று உயிர்மெய் கெடும்.
பத்து + ஆயிரம் = பதினாயிரம்
பத்து + மடங்கு = பதின்மடங்கு
ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம்
ஒன்பது + மடங்கு = ஒன்பதின்மடங்கு
16. ஒன்று முதல் பத்து ஈறாகிய எண்களின் இரட்டிப்பு
ஒன்பது நீங்கலாக ஒன்று முதல் பத்து ஈறாகிய ஒன்பது எண்களையும் இரட்டித்துச் சொல்லுமிடத்து, நிலைமொழியின் முதலெழுத்து மாத்திரம் நிற்க, மற்ற எல்லாம் கெட்டு, முதல் நெடிலாயின் குறுகவும், வந்தவை உயிராயின் வகரவொற்றுத் தோன்றவும், மெய்யாயின் வந்த எழுத்து மிகவும் பெறும்.