120
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று
ஐந்து + ஐந்து = ஐயைந்து
இதுவரை எண்ணுப் பெயர்கள் எவ்வாறு புணர்ந்துவரும் என்பதைப் பார்த்தோம். இவற்றை நன்கு நினைவிற்கொண்டால், சொற்புணர்ச்சியைப் பயன்படுத்தும்போது பிழையின்றி எழுதலாம்.
ஓர் மரம் / ஒரு மரம் - எது சரி?
அறிவோம்! தெளிவோம்!
ஒரு மரம் என்பதுதான் சரி. புணர்ச்சியின்படி, ஒன்று + மரம் = ஒரு மரம் என்றே + புணரவேண்டும். ஒன்று என்னும் நிலைமொழியின்முன், வருமொழி முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் மட்டுமே ஓர் என மாறும். ஒன்று + ஆடு = ஓர் ஆடு எனப் புணரும். ஒரு ஆடு எனப் புணராது.
ஓர் ஆசிரியர்/ ஆசிரியர் ஒருவர் - எது சரி?
ஆசிரியர் ஒருவர் என்பதே சரி. முன்னர்க் கூறிய விதிப்படி, உயிரெழுத்துக்குமுன் ஓர் வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆயினும், இங்கு எடுத்துக்காட்டப்பட்ட சொல் (ஆசிரியர்), உயர்திணைக்கு உரியது. உயர்திணைச் சொற்களுக்குமுன் ஒரு/ ஓர் வரவேண்டியதில்லை. அரசன் ஒருவன், பெண்ணொருத்தி, மாணவன் ஒருவன் என்று எழுதினாலே போதும். ஒரு/ ஓர் ஆகிய இரண்டையும் அஃறிணைச் சொற்களுக்குமுன் பயன்படுத்துவோம். இக்காலத் தமிழ் மரபில் இத்தகைய வழக்குத்தொடர் உள்ளது.
4.10 வல்லினம் மிகும் இடம், மிகாஇடம்
தமிழில் எழுதும்போது ஒற்றுப்பிழை, எழுத்துப்பிழை, சொற்பிழை, தொடர்ப்பிழை, கருத்துப்பிழை, பிறமொழிக் கலப்புப் பிழை, குறியீட்டுப் பிழை, புணர்ச்சி, மரபு, யாப்பு எனப் பல வகைகளில் பிழை ஏற்படுகிறது. இவற்றுள் ஒற்றுப்பிழைக்குக் காரணமாக அமைவது, வல்லின மெய்யாகிய க், ச், த், ப் என்னும் எழுத்துகள்.
இந்நான்கு வல்லினமெய் எங்கு இடம்பெற வேண்டும், எங்கு இடம்பெறக் கூடாது என்பதைக் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். படித்தவர்களாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் இந்த வல்லினமெய்களை உரிய இடங்களில் பயன்படுத்துவதில் தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. இவ்வல்லின மெய்கள் எங்கு மிகும்? எங்கு மிகாது? என்பதைப் புரிந்துகொண்டால் ஓரளவாவது பிழையைத் தவிர்க்கலாம்.
4.10.1 வல்லினம் மிகுமிடம்
1) அக்குதிரை, இக்கதவு, உப்பக்கம் (சுட்டெழுத்தின் பின்)
2) அந்தக்காலம், இந்தப் பொருள், எந்தச் சொல் (சுட்டு, வினாச் சொற்களின் பின்)