பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

131






பாடம் - 5

தனிச்சொல் - துணைவினை - மொழிநடை


5.0 முன்னுரை

எழுத்து, சொல், தொடர், புணர்ச்சி ஆகிய தலைப்புகளின்கீழ் பல்வேறு கருத்துகளை அறிந்துகொண்டோம். இப்பாடப்பகுதியில் தனிச்சொல், இணைப்புச்சொற்கள், இணைச்சொற்கள் அவற்றின் வகைகள், தனிவினை, கூட்டுவினை ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம். மொழிநடை அதன் இன்றியமையாமை, செம்மையான மொழிநடைக்குத் தேவையான இன்றியமையாத கருத்துகள் ஆகியவற்றையும் வினா வகைகள், விடை வகைகள் ஆகியவற்றையும் தெரிந்துகொள்வோம்.

5.1 தனிச்சொல்

ஒரு சொல் தனித்து வந்து ஒரு பொருளைத் தந்தால் அது தனி மொழி அல்லது தனிச்சொல் எனப்படும்.

எ.கா. மரம், நீர், கடல்

ஒரு செய்யுளிலோ தொடரிலோ சில சொற்கள் தனித்துவந்து பொருள் தருவதுண்டு. எடுத்துக்காட்டாக,

பொருட்டு என்னும் சொல்

தடுப்பூசி செலுத்தும் பொருட்டு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தொடரில் 'பொருட்டு' என்னும் தனிச்சொல் கட்டாயம் என்னும் பொருளில் வந்துள்ளது.

5.2 இணைப்புச் சொற்கள்

இணைப்பு என்றால் சேர்ப்பது என்று பொருள். இணைப்புச் சொல் என்பது சொல் அல்லது சொற்றொடர் அல்லது தொடர்க்கூறு ஆகியவற்றை இணைக்கப் பயன்படும் சொல் ஆகும்.

5.2.1 இணைப்புச் சொற்களின் பயன்பாடு

நம்முடைய பேச்சில் இயல்பாகவே இணைப்புச் சொற்கள் இணைந்தே வருகின்றன. இதனால் எளிமை, சிக்கனம் கருதியும் கேட்பவர்க்கு விளங்கும் வகையிலும் தொடர்கள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, 'இராமன் வந்தான்', 'சீதை வந்தாள்', என்று தனித்தனியாக இரு தொடரையும் கூறாமல், 'இராமனும் சீதையும் வந்தனர்' என்ற கூறலாம். இங்கு 'உம்' என்பது இணைப்புச் சொல்லாக உள்ளது. மேலும் சில எடுத்துக்காட்டுகள்,