பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

139







இவற்றுள் நிலை என்ற வினை அடியை தவிர்த்து ஏனையவை அனைத்தும் ஒட்டுக்கள் எனப்படும். இந்த ஒட்டுக்கள் தனித்து நின்று பொருள் உணர்த்துவது இல்லை. இலக்கணப் பொருளை மட்டுமே உணர்த்தும். ஆகவே, இவ்வாறு பல கூறுகளாகப் பொருள் தரக்கூடிய வகையில் பிரித்து நோக்க முடியாத வினைச்சொற்கள் தனி வினைகள் எனப்படும்.

5.5.2 கூட்டுவினை

ஒரு வினைச் சொல்லானது பொருள் தரக்கூடியவாறு பல கூறுகளாகப் பிரிகின்ற போது அது கூட்டுவினை எனப்படும். இங்கு இரு சொல் கூட்டு சேர்ந்து ஒரு வினைச்சொல்லாக செயற்படும். பிரித்தால் இரண்டும் இரு வேறு பொருளைத் தருவனவாகவும் அமையும்.

எ.கா

> தந்தியடி

> கைப்பிடி

தட்டிக்கேள்

மேலே உள்ள சொற்களைத் தந்தி + அடி, கை + பிடி, தட்டி + கேள் என்றவாறு பிரித்து நோக்க முடியும். இவ்வாறு பிரிகையில் தந்தி என்பது பெயர்ச் சொல்லாகவும் அடி என்பது வினைச்சொல்லாகவும் இருவேறு பொருளை உணர்த்துகின்றன. கைப்பிடி என்ற சொல்லில் கை என்பது பெயர்ச் சொல்லாகவும் பிடி என்பது வினைச்சொல்லாகவும் அமைந்து காணப்படுகின்றது. அதேபோல் தட்டிக்கேள் என்ற வினைச்சொல் தட்டி என்ற வினையையும் கேள் என்ற வினையையும் உணர்த்துகின்றது.

5.6 மொழிநடை

கதை அல்லது கட்டுரை எழுதுவோர் தம் கருத்தைப் படிப்போர் விரும்பும் வகையில் எழுதும் முறையை அல்லது எழுதும் பாங்கினை மொழிநடை என்பார்கள். எழுத்தின் வெற்றி, எழுதும் பாங்கினைப் பொறுத்து அமையும் என்பர் சான்றோர்.

நாம் நூல்களை படிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், குறிப்பிட்ட ஒரு நூலின் நடையமைப்பு எப்படி உள்ளது என அறிந்திருப்போம். குறிப்பிட்ட எழுத்தாளரின் கதைகளைப் படிக்கும் வழக்கம் இருந்தால், அந்த எழுத்தாளரின் எழுத்துநடை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும். இவ்வாறு ஒரு கதையோ கட்டுரையோ உரைநடையோ படிக்கும்போது, அதற்கெனத் தனிநடையமைப்பு கொண்டிருப்பதை மொழிநடை என்கிறோம். மொழிநடை என்பது, படிப்போரைக் கவரும் வகையில் அமையவேண்டும். இல்லையெனில், அந்த நூல் எதற்காக எழுதப்பட்டதோ அதற்கான நோக்கம் நிறைவேறாமல் போகும்.

பொதுவாகக் கடினமான மொழிநடையை யாரும் விரும்புவதில்லை. இங்குக் கடினம் என்று கூறுவது, சொல்லுக்குச் சொல் பொருள் அறியவேண்டிய நிலையில் இருக்கும் நடையமைப்பு ஆகும். எளிய நடையில் படிப்போரை ஈர்க்கும் வகையில் சொல்ல வேண்டிய கருத்தைத் தெளிவாகக் கொண்டு செல்லும் நடையமைப்பை அனைவரும் விரும்புவர்.