146
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
"உன்னிடம் பாரதியாரின் கவிதை நூல் இருக்கிறதா?" இல்லை என்றால் தன்னிடம் உள்ள இரண்டு பாரதியாரின் கவிதை நூலில் ஒன்றினை கொடுக்கும் விதமாகக் கேட்கப்பட்ட வினா கொடை வினா எனப்படும்.
o ஏவல் வினா
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினா ஏவல் வினா எனப்படும்.
"வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?" என்று அக்கா, தம்பியிடம் ஏவும் தன்மையில் கேட்கப்படும் வினா ஏவல் வினா எனப்படும்.
5.10 தொகுப்புரை
இப்பாடப்பகுதி வாயிலாக இணைப்புச்சொற்கள் எவையெவை, அவை தொடர்களில் பெறுமிடங்கள், அவற்றை எங்கு, எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது குறித்துத் தெளிவாக அறிந்துகொண்டோம். இணைச்சொற்களின் பெயர்க்காரணம், அவற்றின் வகைகள், அவற்றைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குதல் முதலிய கருத்துகளையும் புரிந்துகொண்டோம். மேலும், மொழிநடையின் இன்றியமையாமை, எத்தகைய மொழிநடைகள் நூல்களில் காணப்படுகின்றன என்பது குறித்தும் பார்த்தோம். அறுவகை அறுவகை வினா, எண்வகை விடை ஆகியவற்றையும் அறிந்துகொண்டோம். இவற்றைப் புரிந்துகொண்டு, பிழைநேராமல் எழுத்திலும் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்துவோம்.
அறிவோம் தெளிவோம்
ஓர் அழகான கிளியைக் கண்டேன், அழகான கிளியைக் கண்டேன் – எந்தத் தொடர்
சரியானது?
அழகான கிளியைக் கண்டேன் என்னும் தொடரே சரியானது. இரு தொடரமைப்பையும் உற்றுநோக்குவோம். முதல் தொடரில், ஓர் அழகான கிளி என்னும் சொற்றொடரைப் படிக்கும்போது, அழகான கிளிதான். ஆனால், கிளியின் ஏதோ ஒரு பகுதி மட்டும் அழகாக உள்ளது என்னும் பொருள் தருகிறது. அந்தக் கருத்தைத் தருவது, ஓர் என்னும் எண்ணடைச் சொல். அழகான என்னும் பெயரடை, கிளிக்கு ஆகிவர, ஓர் என்னும் அடை, அழகான என்னும் பெயரடைக்கு ஆகிவருகிறது. இத்தொடரில், பார்த்தது என்னவோ ஒரு கிளியைத்தான். அவ்வாறிருக்க, ஓர் என்னும் அடைமொழி வரவேண்டிய தேவையில்லை. இஃது, ஆங்கிலமொழிக் கலப்பினால் ஏற்பட்ட தாக்கம் எனலாம். 'I saw a beautiful parrot' என்பதன் ஆக்கமாக இத்தொடர் உள்ளது.
இரண்டாவது தொடரில், நான் கிளியைப் பார்த்தேன். அஃது அழகாக இருந்தது என்னும் பொருளைத் தருகிறது. இத்தொடர் பொருள் தெளிவை ஏற்படுத்துகிறது.