பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






பாடம் : 6


சொற்பிரிப்பு, சொற்சேர்க்கை முறைகள், அமைப்பு முறை,

பிறமொழிப் பயன்பாடு, நிறுத்தக் குறியீடு

6.0 முன்னுரை

மொழியைப் பேசும்போது கேட்பவருக்குப் புரிதலில் தவறு ஏற்படுவது அரிது. ஆனால், பேசிய கருத்தை எழுதும்போது நாம் நினைத்த கருத்தை அப்படியே மொழி வடிவில் கொண்டு வருதல் வேண்டும். அதற்குச் சில விதிகளை முறையாகப் பின்பற்றுதல் வேண்டும்.

6.1 சொற்பிரிப்பும், சொற்சேர்க்கையும்

நாம் சில தொடர்களைப் படிக்கும்போது, அவற்றில் இடம்பெற்றுள்ள சொற்களைச் சேர்த்துப் படிக்க வேண்டுமா, பிரித்துப் படிக்க வேண்டுமா எனக் குழப்பம் ஏற்படுவதுண்டு. சிலபோது, பிரித்துப் படிப்பதால் பொருள் மாற்றம் ஏற்படும். எந்தெந்தச் சொற்களைச் சேர்த்துப் படிக்கலாம், எந்தெந்தச் சொல்லைப் பிரித்துப் படிக்கலாம் என இப்பகுதியில் அறிந்துகொள்வோம்.

வாய்விட்டுப் படிக்கும்போது பொருள் புரிவதற்காகச் சில இடங்களில் நிறுத்திப் படிப்போம். வேறுசில இடங்களில் இடைவெளிவிட்டுப் படிப்போம். ஆனால், முறையாகப் படிக்கவில்லை எனில், பொருட்குழப்பம் ஏற்படும். எடுத்துக்காட்டாக,

மலர்/ அத்தை வீட்டுக்குப் போனாள்

மலர் அத்தை/ வீட்டுக்குப் போனாள்.

மலர் அத்தை வீட்டுக்குப்/ போனாள்.

மேற்கண்ட மூன்று தொடரையும் வாய்விட்டுப் படித்துப் பாருங்கள். எங்கு / இந்தக் குறி இடம்பெற்றுள்ளதோ அங்கு நிறுத்திப் படியுங்கள். ஒவ்வொரு தொடரும் ஒவ்வொரு பொருளைத் தருகின்றதல்லவா?

ஆகவே, உண்மையில் மலர் என்ற பெண், அவளுடைய அத்தை வீட்டிற்குச் சென்றாள் எனில், முதலில் கூறப்பட்ட தொடர்தான் சரியாக இருக்கும். அப்படியானால், மலர் என்ற சொல்லின்பின் சிறிது நிறுத்தி அதன்பின் மற்றச் சொற்களைப் படிக்கவேண்டும். இதனால், எங்கெங்குச் சேர்த்துப் படிக்கவேண்டும், எங்கெங்குப் பிரித்துப் படிக்கவேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

சொற்களைச்சேர்த்துப் படிக்கவேண்டிய இடங்கள்

1) பெயரடை, வினையடை

பெயரின் தன்மையை விவரிப்பது பெயரடை உயரமான வீடு