பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






6.2.5.15 சாய்கோடு


ஒன்றுக்கு மேற்பட்ட பொருத்தமான சொற்களை எழுதும்போது அல்லது என்ற சொல்லுக்குப் பதிலாகச் சாய்கோடு இடலாம்.

இந்த வேலையில் சேர தமிழ் / ஆங்கிலம் / மலையாளம் / கன்னடம் ஆகிய மொழிகளில் ஒன்று தெரிந்திருக்க வேண்டும்.

  • சுருக்க முறைகள் எழுதும்போது சாய்கோடு பயன்படும்.

த / பெ (தந்தை பெயர்)

  • அல்லது என்ற பொருளில் பயன்படுத்துவதுபோல மற்று என்ற பொருளில் எழுதும்போது சாய்கோடு இடக்கூடாது.

அந்த ஊருக்கு விடுதி, பேருந்து வசதிகள் உண்டு.

அறிவோம்! தெளிவோம்!

நிறுத்தற்குறி/ நிறுத்தக்குறி – எது சரி?

நிறுத்தக்குறி என்பதே சரி. புணர்ச்சிவிதிப்படி, நிறுத்தம் + குறி = நிறுத்தக்குறி என ஆகும். ஆனால், நிறுத்தல் + குறி = நிறுத்தற்குறி என ஆகும். நிறுத்தம் என்பது, படிக்கும்போது நிறுத்திப் படிக்கவேண்டியதனையும் நிறுத்தல் என்பது, ஒரு பொருளின் எடையை அளவிடுவதனையும் குறிக்கும். எனவே, நிறுத்தம் என்பது வேறு, நிறுத்தல் என்பது வேறு. இவ்விரு சொல்லின் வேறுபாடுணர்ந்து 'நிறுத்தக்குறி' என்றே வழக்கத்தில் பயன்படுத்துவோம்.

6.3 பிறமொழிப் பயன்பாடு

பல நூற்றாண்டுகளாகப் பேச்சுமொழியாகவும் எழுத்துமொழியாகவும் இருப்பது தமிழ் மொழி. இப்படிக் காலம் காலமாகப் பேச்சிலும் எழுத்திலும் இருப்பதாலேயும், அன்னியப் படையெடுப்பு, வணிகத்திற்கான போக்குவரத்து போன்ற காரணங்களாலும் தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பு ஏற்பட்டுள்ளது.

6.3.1 உலகம் சுற்றும் மொழி

ஒரு நாட்டில் வாழும் மக்கள் வேறு எங்கும் போகாமல் ஓர் இடத்திலேயே வாழ்ந்து வந்தாலோ, வேறு மொழி பேசும் மக்கள் அவர்கள் இடத்திற்கு வராமல் இருந்தாலோ மட்டும்தான் அவர்களது மொழி எந்தக் கலப்பும் இல்லாமல் இருக்கும். வணிகத்திற்காகவும், வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும் மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.