பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

171







இதனால் மொழிகளில் பிறமொழிகளின் கலப்பு ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். தமிழ் மக்கள் ஈராயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே பிற நாடுகளுடன் நல்ல தொடர்பில் இருந்தார்கள். அதனால் தமிழ் மொழியில் பல மொழிச் சொற்களின் கலப்பு இருக்கும்.

நெடுங்காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன், பல நாடுகளுக்கும் சென்று பலரோடு பழகி, சுறுசுறுப்புடன் வாழ்கிறான். அவனிடம் பல நாடுகளுடைய மக்கள் பயன்படுத்தும் பொருள்கள் இருக்கும். அவற்றை அவன் பயன்படுத்துவான். அதுபோல சுறுசுறுப்புடன் உலவி வரும் தமிழ்மொழி முற்காலத்தில் தன்னோடு பழகிய ஆரியம், இலத்தீன் முதலான மொழிகளின் சில சொற்களையும், தற்காலத்தில் தன்னோடு நட்பாயிருக்கும் ஆங்கில மொழியின் சில சொற்களையும் பயன்படுத்தி வருகிறது என்று மறைமலை அடிகள் கூறுகிறார்.

இவ்வாறு பல பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்துள்ளன. காலப்போக்கில் அவை தமிழ்ச் சொற்களாகவே மாறிப் போய்விட்டன. யாரேனும் ஒருவர் அடையாளம் காட்டும் வரை அனைவரும் அவற்றைத் தமிழ்ச் சொற்களாகவே எண்ணிப் பயன்படுத்தி வருவர். அவ்வாறு தமிழுடன் கலந்த பிறமொழிகள் பற்றி முதலில் காணலாம்.

6.3.2 முதல் கலப்பு

முதன்முதலில் தமிழ்மொழியில் மொழிக் கலப்பு சமணர்களின் மூலம் ஏற்பட்டது. வடமொழி என்று அழைக்கப்படும் பிராகிருதமும் அதற்கடுத்து சமஸ்கிருதமும் மற்றும் பாலி மொழியும் தமிழ்மொழியில் கலந்தன. இம்மொழிகளில் இருந்தே மிகப்பெரிய அளவிலான சொற்கள் தமிழ்மொழியில் கலந்தன.

6.3.3 மணியும் பவளமுமாகப் பிறந்த மணிப்பிரவாளம்

பிற்காலச் சோழர் காலத்தில் இருந்து தமிழ்மொழியில் வடமொழிச் சொற்களின் பயன்பாடு அதிகமாக ஆரம்பித்தது. தமிழ்மொழியில் பல வடமொழிச் சொற்கள் கலந்து ஒரு புதிய மொழி நடையே உருவானது. மணியும் பவளமும் கலந்ததுபோல அது இருந்ததால் அதனை மணிப்பிரவாள நடை என அழைத்தனர்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில் இன்று தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசும் தங்கிலீசு போல அது உருவானது. சமண உரைநடையிலும் திவ்ய பிரபந்த உரையிலும் தலைகாட்ட ஆரம்பித்த இந்த நடை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவல் வரை நீண்டது.

அதன்பின், தனித்தமிழ் இயக்கம் தோன்றித் தூய தமிழ்மொழியைப் பயன்படுத்தக் கற்பித்தது. ஆனால், இன்றும் நம்மை அறியாமல் பல வடமொழிச் சொற்களை நாம் பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக,

(பேச்சுவழக்கு எழுத்துவழக்கு வேறுபாட்டினை மாணவர்கள் அறியும்பொருட்டு எடுத்துக்காட்டுகள் பேச்சுவழக்கிலும் எழுத்துவழக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளன.)