தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
21
1.14 தொகுப்புரை
நாம் இதுவரை தமிழ் எழுத்துகளின் வகைதொகை, அவை பிறக்குமிடங்கள், அவற்றின் ஒலிப்புமுறைகள் ஆகியவற்றை விரிவாகப் பார்த்தோம். தமிழில் மயங்கொலிகள் சிறப்பிடம் பெறுவதால், அவற்றைப் பற்றிய விரிவான விளக்கத்தையும் அவை பயன்படும் இடங்கள் பற்றியும் அறிந்துகொண்டோம். மொழிக்கு முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் எந்தெந்த எழுத்துகள் வரும் என்பதையும், எழுத்துகளின் மயக்கம், எழுத்துப்போலி எவ்வாறு வரும் என்பதையும் அறிந்துகொண்டோம். தமிழில் தவறின்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தமிழ் எழுத்துகளின் அறிமுகம் நன்கு தேவை. ஒரு சொல்லில் இடம்பெற வேண்டிய எழுத்து, வேறொன்றாக மாறினால் பொருட்குழப்பத்தை ஏற்படுத்திவிடும். இதனை நன்குணர்ந்து பிழையின்றி எழுதப் பயிற்சி பெறவேண்டும். தமிழில் பிழையின்றிப் பேசவும் எழுதவும் விரும்புபவர்கள், தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்களையும் ஒலிவடிவங்களையும் நன்கு உற்றுநோக்கிக் கவனத்தில் கொள்ள வேண்டும். பன்முறைப் பயிற்சி, பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவும்.