பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

29






பாடம் 2

சொல்வகைகள் அறிமுகம்


2.0 முன்னுரை

தமிழ் எழுத்துகளின் அறிமுகத்திற்கு அடுத்துச் சொற்கள் அறிமுகமாகின்றன. நாம் பேசும்போது சொற்களாய்ப் பேசுவதைக் காட்டிலும் தொடர்களாய்ப் பேசுவது மிகுதி. அவ்வகையில் எழுத்துகள் பல சேர்ந்து பொருள் தரும் சொற்களாகின்றன. சொற்கள் பல சேர்ந்து தொடர்களாகின்றன. இந்தப் பிணைப்பு ஒன்றுடன் ஒன்று சங்கிலித்தொடர்போல் இணைந்துள்ளது. இந்தப்பாடம், உங்களுக்குத் தமிழில் வழங்கும் சொல்வகைகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் எடுத்துரைக்கிறது.

2.1 பதம்

ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது, சொல் எனப்படும்.

எகா. பூ, கனி, கல்வி, பட்டம்.

எழுத்துகளால் உருவானதாக இருந்தாலும் பொருள் தருவதாக இருந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது. பொருள் தராதவை சொல் என்று கூறப்படுவது இல்லை. எடுத்துக்காட்டாக,

வில்க

இதில் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்துள்ளன. ஆயினும், பொருள் தரவில்லை. எனவே, இதனைச் சொல் என்று சொல்வதில்லை.

ஒரு மொழிக்கு அடிப்படை அம்மொழியில் உள்ள எழுத்துகள் ஆகும். எழுத்துகள் ஒன்றோ பலவோ சேர்ந்து சொல் உருவாகிறது. கிளவி, பதம், மொழி என்பன சொல்லின் வேறுபெயர்கள். ஒரு சொல் தனித்து நின்றோ பல சொற்கள் சேர்ந்து நின்றோ சொற்றொடர் உருவாகும். இவ்வாறு ஒரு மொழியின் படிநிலைகள் அமைகின்றன.

ஓர் எழுத்துச் சொற்கள் = பூ, வா, ஆ, கை, பை, ஈ, தை.

ஈரெழுத்துச் சொற்கள் = நட, நில், படி, கண், இழு.

மூவெழுத்துச் சொற்கள் = பலம், புறம், கடல், தண்மை, மாண்பு.

நாலெழுத்துச் சொற்கள் = கடவுள், சிறுத்தை, வேந்தன், அரும்பு, தங்கம்.

மேலும், நாலெழுத்துகளுக்கு மேற்பட்ட சொற்கள் தமிழில் உண்டு.