பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







சிந்தனை வினா:

கவின் - இச்சொல் அறிந்த சொற்களஞ்சியமா? பயன்படுத்தும் சொற்களஞ்சியமா?

பேசினான், சொன்னான், கூறினான் என்ற சொற்களை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். ஆகையால், இத்தகைய சொற்கள் நம் பயன்பாட்டிலுள்ளதால், இவை பயன்படுத்தும் சொற்களஞ்சியம் ஆகும். பகர்ந்தான், இயம்பினான், நவின்றான், மொழிந்தான் இவை போன்ற சொற்களை நாம் நூலில் படித்திருக்கலாம் அல்லது ஏதேனும் சொற்பொழிவில் கேட்டிருக்கலாம். இவை நமக்குத் தெரிந்திருந்தாலும் நம்முடைய பேச்சில் அதிகமாகப் பயன்படுத்தமாட்டோம். ஆகையால், இவை அறிந்த சொற்களஞ்சியம் அளவிலேயே நின்றுவிடுகின்றன.

அறிந்த சொற்களஞ்சியத்திலுள்ள சொற்களை நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டுமா? இந்த வினாவுக்குக்கான விடை, 'ஆம்' என்பதே. மற்றவர் பேச்சில் வெளிப்படும் புதிய சொற்களை அறிந்துகொள்ளவும் பல நூல்களைப் படித்துப் பொருள் உணர்ந்துகொள்ளவும் நமக்கு அறிந்த சொற்களஞ்சியத்திலுள்ள சொற்கள் தேவை. அவற்றைப் பயன்படுத்தும்போதுதான் அவை பயன்படுத்தும் சொற்களஞ்சியம் ஆகும்.

நாம் படைப்பாற்றல் திறன் மிக்கவர்களாக இருந்தால், நம்முடைய எழுத்தில் பல சொற்களைப் பயன்படுத்துவோம் அல்லவா! உலகப் புகழ் நாடக ஆசிரியராக விளங்கிய ஷேக்ஸ்பியர், தாம் புனைந்த நாடக உரையாடல்களில் புதிய சொற்கள் பலவற்றைப் பயன்படுத்தியுள்ளார். அச்சொற்களின் தொகுப்பைக் கொண்டு ஓர் அகராதியே உருவாக்கலாம் என அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆகவே கதை, கவிதை, கட்டுரை, உரையாடல் எனப் பல இலக்கிய வடிவங்களை வெளியிட, சொற்களஞ்சியம் தேவை. இத்தகைய சொற்களஞ்சியத்தைப் பெருக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை இனிக் காணலாம்.

சொற்களஞ்சியப் பெருக்கம்

சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதற்குப் பல்வேறு செயல்பாடுகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு அறிந்துகொள்வோம்.

விளையாட்டு முறை

புதிய சொற்களை அறிமுகப்படுத்தும் வகையில், விளையாட்டு முறையின் மூலம் சொற்களஞ்சியத்தைப் பெருக்கலாம்.

படங்கள் அல்லது பொருள்கள்

நம்மைச் சுற்றிக் காணப்படும் உண்மைப்பொருள்கள் அல்லது அவற்றின் படங்கள் வாயிலாகச் சொற்களஞ்சியத்தை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாகத் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றைக் கூறலாம்.