66
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
இ) இலக்கணச் சூழல்
ஆடு
ஆடு
ஆடு என்னும் சொல், பெயர்ச்சொல்லாகவும் வரும். வினைச்சொல்லாகவும் வரும். வயலில் ஆடு மேய்கிறது எனச் சொல்லும்போது, ஆடு என்பது, ஒரு விலங்கின் பெயரைக் குறிக்கும் பெயர்ச்சொல். இசைக்கேற்ப நடனம் ஆடு எனச் சொல்லும்போது, ஆடு என்பது ஆடுதல் என்னும் தொழிலைக் குறிக்கும் வினைச்சொல்.
ஈ) சொல் இணைப்புச் சூழல்
―
சவுக்கு சவுக்கு மரம்
சவுக்கடி
சவுக்கு என்னும் சொல்லுடன் வெவ்வேறு சொற்கள் இணையும்போது, வெவ்வேறு பொருளைத் தருகின்றன. சவுக்குமரம் என்று கூறும்போது, ஒரு வகை மரத்தைக் குறிப்பிடுகிறது. சவுக்கடி கிடைத்தது என்று கூறும்போது, சவுக்கால் அடித்ததைக் குறிப்பிடுகிறது.
பேச்சுச் சூழல்
இது, பொருள் மயக்கம் கொண்ட மொழிக்கூறுகளைச் சார்ந்தது. அதனால், அதனதன் பொருள்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பொருள் உணரவேண்டும். இதனைப் பேச்சுநடை, வட்டாரவழக்கு, கதைநடை, கவிதைநடை போன்ற பல்வேறு மொழிக் கூறுகளில் உணரலாம்.
எடுத்துக்காட்டாக,
நான் மதுரை
என்னும் தொடர் பொருள் தெளிவில்லாமல்,
1. நான் மதுரையைச் சார்ந்தவன்
2. நான் மதுரைக்குப் போகிறவன்
3. நான் மதுரையிலிருந்து வருபவன்
எனப் பல பொருள்களைத் தரக்கூடிய வகையில் உள்ளது. இப் பொருள் மயக்கங்கள் பேச்சுச் சூழலினால் தெளிவுபடும். அதாவது நடத்துநரிடம், பயணி தான் போகவேண்டிய இடத்தைக் குறிப்பிடும்போதும், தான் எங்கிருந்து வருகிறேன் என்பதைக் குறிப்பிடும்போதும், தன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரிடம் தன் சொந்த ஊர் இன்னதென்பதைச் சுட்டிக்காட்டவும் எனப் பல நிலைகளில் "நான் மதுரை" என்னும் தொடர் பயன்படுகிறது.
2.7.1 சொற்பொருள் மாற்றம்
பொருளை உணர்த்துவதற்குச் சொற்கள் கருவிகளாக உள்ளன. அவை, எவ்வாறெல்லாம் மாற்றம் பெற்றுள்ளன என்பதைப் பின்வரும் தலைப்புகளில் காண்போம்.