தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
85
3.5.3.5 தன்வினைத் தொடர்
எழுவாய் தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினைத் தொடர் எனப்படும்.
எடுத்துக்காட்டு
செழியன் படித்தான்
கயல்விழி ஓடினாள்
கவிதா வரைந்தாள்
வளவன் உணவு உண்டான்
3.5.3.6 பிறவினைத் தொடர்
எழுவாய் பிறரைக் கொண்டு தொழில் செய்விப்பதை உணர்த்துவது பிறவினைத்தொடர்
எனப்படும்.
எடுத்துக்காட்டு
தமிழாசிரியர் கற்பித்தார்.
3.5.3.7 நேர்கூற்றுத் தொடர்
ஒருவர் கூறியதை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே எடுத்துக் கூறுவது நேர்கூற்றுத் தொடர் எனப்படும். இந்நேர்கூற்றுத் தொடர் தன்மை, முன்னிலை இடங்களில் வரும்.
எடுத்துக்காட்டு
"முகக்கவசம் அணியுங்கள்" எனத் தமிழக முதல்வர் மக்களுக்குக் கூறினார்.
மணமக்களை "எல்லா வளமும் நலமும் பெற்று வாழவேண்டும்" எனச் சான்றோர் வாழ்த்தினார்.
போருக்கு "இன்று போய் நாளை வா" என இராமன் கூறினார்.
நாளை "தேர்வுக்குத் தயாராக வா" என ஆசிரியர் கூறினார்.
இரமணன் "இன்று மழை பெய்யும்" எனக் கூறினார்.
3.5.3.8 அயற்கூற்றுத் தொடர்
ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவது போல் கூறுவது அயற்கூற்றுத் தொடர் எனப்படும். தன்மை, முன்னிலை இடங்களில் வரும் எழுவாயைப் படர்க்கையில் அமைத்துக் கூறவேண்டும்.
1. நேர்கூற்றில் இடம்பெறும் காற்புள்ளி, மேற்கோள் குறி ஆகியவை அயற்கூற்றில் இடம் பெறாது.
2. 'என்று' 'என' ஆகிய இணைப்புச்சொற்கள் அயற்கூற்றில் வராது.
3. தன்மைப் பெயரையும் முன்னிலைப் பெயரையும் படர்க்கைப் பெயராக மாற்ற வேண்டும்.
4. படர்க்கைப் பெயர்கள் மாற்றமின்றி வரும்.