பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புமாகக் கொண்டாடி மகிழ்ந்தார். இராய சொ. உமையாள் மண்டபம்' என்ற பெயரால் சங்கத்தின் கட்டடத்தில் மேல்மாடி ஒன்றும் கட்டிக்கொடுத்துள்ளார். தனவணிக சமூகத்தில் வளர்ந்த குறைபாடுகளைச் சீர்திருத்தம் செய்யக் கருதி, 11.9-1919இல் பல அன்பர்கள் சேர்ந்து தனவைசிய ஊழியர் சங்கம் கண்டனர். இதிலும் இராய சொ. அவர்களுக்குப் பெரிதும் பங்கு உண்டு. இதழியல் தொண்டு: தனவைசிய ஊழியர் சங்கத்தின் சார்பில், 8.9.1920 இல் தனவைசிய ஊழியன் என்ற பெயரோடு ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் பெற்றது. இதன் ஆரம்பகால ஆசிரியராக, அன்பர் சொ. முருகப்பா பதின் மூன்று திங்கள் பணியாற்றினார். இரண்டாவது ஆண்டு ஆரம்பத்திலிருந்து இராய சொ. அவர்கள் இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ro சில ஆண்டுகளுக்குப்பின் இப்பத்திரிகையை ஊழியன் என்ற பெயருடன் மாற்றியமைத்து கொள்கையைப் பரந்த அளவில் விரிவுபடுத்தி, காங்கிரஸ் கொள்கை வழிநின்று இருபது ஆண்டுகள் இராய சொ. நடத்தினார். இப்பத்திரிகை காரைக்குடியிலும் சென்னையிலுமாக வெளிவந்தது. இன்றையப் பத்திரிகை உலகில் முன்னணியில் உள்ளவர்கள் பலர், ஊழியன் பத்திரிகையில் உதவி ஆசிரியர்களாக இருந்தவர்கள். வ.ரா, தி.ஜர, புதுமைப்பித்தன் முதலியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கொத்தமங்கலம் சுப்பு ஊழியன் தொண்டில் பங்குபெற்றிருக்கிறார். ஊழியன் பத்திரிகைக்கு சென்னையின் விளம்பர முகவராக எஸ்.எஸ். வாசன் பணிபுரிந்தார். அரசியல், சிறை வாழ்வு: இராய சொ.வின் அரசியல் குரு திரு.வி.க எனலாம். அவருடைய பேச்சு, எழுத்து எல்லாமே திருவிக. அவர்களைப் பின்பற்றியதாக இருக்கும். வ. வே. சு. அய்யர், வ. உ. சிதம்பரனார்.சுப்பிரமணிய சிவா முதலியோரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர் இராய.சொ.